போஸ்டர் மூலம் கவனம் ஈர்ப்பத்தில் மதுரைக்காரர்கள் கெட்டிக்காரர்கள். வித்தியாசமாக சிந்தித்து போஸ்டர் அடித்து நாரதர் கலகத்தை ஆரம்பித்து வைப்பார்கள். அவர்கள் அடிக்கும் போஸ்டர் சிரிப்பையும் வரவழைக்கும். சிந்தனையையும் தூண்டும். அந்த வகையில் பரபரப்பை கிளப்பியுள்ளது விஜய்- சங்கீதா படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர். 

தமிழகத்தில் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் நடிகர் விஜய், தனது படங்களில் தொடர்ந்து அரசியல் கருத்துகளை கூறி வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி, உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகி உள்ள நிலையல், கடந்த ஜூன் மாதம் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன், அண்ணாவும், பெரியாரும் இருப்பது போல் ஒட்டப்பட்டுள்ளது. அதன் மேலே, நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார் எனும் வாசகம் இடம் பெற்றிருந்தது.

இதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றபோது, களத்தில் இருந்து நடிகர் விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் பல இடத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. 

அதில் நடிகர் விஜயுடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேசுவது போல் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.  அதுமட்டுமின்றி ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என்ற வாசகம் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில்,  நடிகர் விஜயையை எம்.ஜி.ஆர். போலவும், விஜயின் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து, மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்-சங்கீதா ஜோடியின் திருமண நாளை கொண்டாடும் விதமாக, இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அரசியலுக்கு விஜய்யை அழைக்கும் வகையில், அவரது ரசிகர்கள் அவ்வப்போது இதுபோன்று போஸ்டர்களை ஒட்டி வருவது வழக்கமான ஒன்று. ஆனால், விஜய்யை எம்.ஜி.ஆர். போலவும், சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது, அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.