அரசியலைத் தாண்டி கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததாகவும், அரசியலைப் பொறுத்தவரை, கருணாநிதியை எம்ஜிஆர் தலைவராக ஏற்றுக் கொண்டார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மணவழகர் மன்றம் சார்பில் 61-வது முத்தமிழ் விழா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் 2-ம் நாள் விழா ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி லட்சுமணன் தலைமை தாங்கினார்.

இதில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின் , சீர்கெட்டு இருக்கும் குளத்தை தூர்வாரும் பணியோடு, சீர்கெட்டு இருக்கும் தமிழ்நாட்டையும் தூர்வார வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.

அரசாங்கம் செய்யாத காரணத்தால் நாங்கள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அதை அரசாங்கம் செய்வதற்கு ஏற்ற வகையில், தி.மு.க.வுக்கு பொதுமக்கள் வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என தெரிவித்தார்.

கொள்கை, லட்சியம்  என மாறுபாடு இருந்தாலும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நட்பு கொண்டு இருந்தார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் இன்று அப்படி இல்லை. 1977-ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி கவர்னர் உரையின் போது, மொழிக்கொள்கை பற்றி பேசினார். அப்போது முதலமைச்சராக  இருந்த எம்.ஜி.ஆர். மொழிக்கொள்கையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று குறிப்பிட்டார்.

அரசியலில் நேர் எதிராக இருந்தாலும் கருணாநிதியை எம்ஜிஆர் தலைவராக ஏற்றுக் கொண்டார் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.