Mettur dam level increse 5 feet in one day

கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் வந்ததையடுத்து அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதையடுத்து கபினி, கேஆர்எஸ் மற்றும் ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதில் கபினி அணை அதன் முழு கொள்ளவை எட்டிவிடும் என்பதால் அங்கிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் தற்போது மேட்டூர் அணை வந்தடைந்தது.

இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5அடி உயர்ந்து 45அடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் இருந்து காவிரியாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு ஆயிரத்து நூறு கனஅடியாகக் குறைந்துள்ளது.

தற்போது குடகு பகுதியில் மழை குறைந்ததால் இன்றைய நிலவரப்படி கபினி அணைக்கு நொடிக்கு ஒன்பதாயிரத்து ஐந்நூறு கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் நொடிக்கு 729கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நொடிக்குப் பதினோராயிரத்து ஐந்நூறு கனஅடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து நொடிக்கு 369கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு இன்று நொடிக்கு ஆயிரத்து நூறு கனஅடியாக உள்ளது.

அதே நேரத்தில் அடுத்த 10 நாட்களுக்கு கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடையும் என்பதால் அங்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கினால் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஆனால் நீர் அதிக அளவு கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.