கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் கபினி மற்றும் சேஆர்எஸ் அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கன நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிபார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக  கனமழை கொட்டி வருதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதையடுத்து இந்த இரு அணைகளிலும் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அணைகளில் இருந்து  1 லட்சத்து 16 கன நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணை 97 அடியை எட்டியுள்ளது. இன்று மாலைக்கும் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டிவிடும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  மேட்டூர் அணையின் உச்ச நீர்மட்டம் 124 அடி ஆகும்.  ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை  இந்த ஆண்டு அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90,000 கன அடியில் இருந்து 1,07,064 கன அடியாக அதிகரித்துள்ளது.  இது இன்னும் அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

  

இந்த நிலையில்  நாளை மறுநாள் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு  தண்ணீர் திறந்து விட முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணை நிரம்பி வருவதால் பல ஆண்டுகளுக்குப் பிறகு  டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு மேட்டூர் நிரம்பினால் குறுவை சாகுபடி மட்டுமல்லாமல் தாளடி நெல் போக சாகுபடியும் செய்யலாம் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இயற்கை அன்னை மனது வைத்தால், இந்த ஏழை விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கலாம்.