மீடூ விவகாரம் தற்போது பூதகாரமாகி வருகிறது. மத்திய வெளியுறவு துறை துணை அமைச்சர் அக்பர், மீது 15-க்கும் மேற்பட்ட பெண்கள் 
பாலியல் புகார் கூறி வந்த நிலையில், குற்றம் சாட்டிய பெண் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தன்மீதான பாலியல் புகாருக்கு 
அசைந்து கொடுக்காத அமைச்சர் அக்பர், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், தான் 
ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக கூறி வந்தார். 

இந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு, வழக்கை சந்திப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். பாடகி சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்றும் அவர் கூறியிருந்தார். பாடகி சின்மயியை 
தொடர்ந்து பலரும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவருக்கு ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, புகார் சொன்னவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். 

அதேபோல் வைரமுத்து அவர்களும், அவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப கொடுத்துவிட்டு, வழக்கு தொடர்வதுதான் சிறந்தது என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, நீதிமன்றத்தையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும் கண்ணாபிண்ணாவென்று பேசிய ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், ஹெச்.ராஜாவின் வீடு பூட்டியிருப்பதாக நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.