டெல்டா விவசாயிகளின்  கருத்தரங்கு தஞ்சையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக, கடந்த ஏழாண்டு காலத்திற்கும் மேலாக, காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. 

தொடர்ந்து குறுவை சாகுபடி செய்ய முடியாமலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்குத் திறந்து விடப்படாமலும் ஆளும் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாயத் தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டன.

அதனால் விவசாயிகள் தற்கொலையும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்லும் அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்றார்.

காலம் காலமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் காவிரி படுகை பகுதிகளில் இதுவரை எந்த அரசாங்கமும் விளைவிக்காத கேடாக, இன்றைய மத்திய அரசு வளமான விவசாய பூமியை மலடாக்கும் முயற்சியான ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்து, அதனை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அதன்மூலம் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கிட முயற்சி நடைபெற்று வருகிறது என அவர் குற்றம்சாட்டினார்.. 

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தஞ்சை பிரச்னை அல்ல; தமிழகத்தின் பிரச்னை. இயற்கையின் சதியால் மட்டுமல்ல; அரசின் சதியாலும் காய்ந்து கொண்டிருக்கிறது நமது பூமி. தண்ணீர் கேட்பது நமது உரிமை; கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை; கர்நாடக அரசு கடமை தவறி வருகிறது எனவும்  ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.