மதிமுகவிற்கு ஒரு சீட் தான் என்று திமுக உறுதியாக இருந்த நிலையில் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் வைகோவின் சென்டிமென்ட் வென்றுள்ளது.

கூட்டணி பேச்சு தொடங்கியது முதலே தி.மு.க தரப்புக்கும் மதிமுக தரப்புக்கும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. துவக்கம் முதலே மதிமுகவை கழட்டிவிடும் நோக்கத்தில் தான் திமுக தரப்பு பேசிக் கொண்டிருந்தது. அதிலும் துரைமுருகன் பேச்சுவார்த்தையின் போது அடித்த லந்து, கூறிய வார்த்தைகள் எல்லாம் படபட பட்டாசு ரகம் என்கிறார்கள். அதை எல்லாம் கேட்டுவிட்டு வைகோ மீண்டும் மீண்டும் பேச்சுக்கு வந்ததே பெரிய விஷயம் என்றும் தற்போது கூறுகிறார்கள். 

துவக்கம் முதலே வைகோவுக்கு ஒரு சீட் தான் என்பதில் துரைமுருகன் பிடிவாதம் காட்டினார். ஸ்டாலின் மருமகன் சபரீசனோ அதுவும் எதுக்க கொடுக்க வேண்டும் சட்டப்பேரவை தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம், தற்போது பிரச்சாரம் மட்டும் செய்யச் சொல்லுங்கள் என்று துரைமுருகனை உசுப்பிவிட்டார். இப்படி பேச்சுவார்த்தை எக்குத் தப்பாக போய்க் கொண்டிருந்த காரணத்தினால் மனம் நொந்த வைகோ சென்னை பக்கமே தலைகாட்டவில்லை.

 

இந்த நிலையில் தேமுதிக திமுக கூட்டணிக்கு வராது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு மீண்டும் அறிவாலயம் படி ஏறினார் வைகோ. முதலில் வழக்கம் போல் துரைமுருகனை பார்த்து வைகோ பேசினார். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் ஸ்டாலினை சந்தித்து கைகளை பிடித்து உருகியுள்ளர் வைகோ. நேற்று கட்சி ஆரம்பித்த ஈஸ்வரனுக்கும் ஒரு தொகுதி, எனக்கும் ஒரு தொகுதி என்றால் எப்படி? கட்சி ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது, எனவே கொஞ்சமாவது கண்ணியமான எண்ணிக்கையில் தொகுதி வேண்டும், இரண்டு தொகுதிகளை கொடுங்கள் என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் வைகோ. 

ஆனால் அப்போது அசைந்து கொடுக்காத ஸ்டாலின், பிறகு யோசித்து ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுத்து வைகோவை ஓகே பண்ணுங்கள் என்று துரைமுருகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் பிறகு தான் வேக வேகமாக அறிவாலயம் வந்து தொகுதி உடன்பாட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றுள்ளார் வைகோ. கையெழுத்து போடும் போது வைகோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், அவரது கைகள் நடுங்கியதாகவும் அருகே இருந்தவர்கள் சொல்கிறார்கள். எது எப்படியோ மீண்டும் திமுக தயவில் ராஜ்யசபா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் அதனை வைகோ தக்க வைத்துக் கொள்வாரா என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும்.