மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 4-ம் தேதி திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முன்னதாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று 
நடைபெற்றது. இதில் திமுகவின் தோழமை கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டம் தொடங்கியதும் கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றார். மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 4-ம் தேதி திருச்சியில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சி தலைவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.