போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கடுமையாக எச்சரித்து வந்த தமிழக அரசு மெல்ல இறங்கி வந்து அதிரடி ஆப்ஃரை வழங்கியுள்ளது. 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்காக விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.


இந்நிலையில் இன்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஆசிரியர்களே நினைத்துப் பார்க்காத அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்படும். ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்களது பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்தில் பணி மாற்றம் வழங்கப்படும்’’ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் கோரி ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். அவ்வளவு எளிதாக பணியிட மாற்றம் பெற்று விடமுடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இப்படியொரு பெரும் வாய்ப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே வேளை சேலம் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று காலை பள்ளிக்கு திரும்பியுள்ளதாக அம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.