பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் ராவத், மிசா பாரதி, கனிமொழி உள்ளிட்ட  தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

பாஜகவுக்கு  எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. மோடியின் வலிமையை குறைக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் முக்கிய தலைவர்களுக்கு சோனியாகாந்தி சமீபத்தில் விருந்து கொடுத்தார்.

சோனியாவை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அப்படி ஏதும் விருந்தளிக்கும் திட்டம் தேசியவாத காங்கிரசுக்கு இல்லை என்று அக்கட்சியினர்  தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று டெல்லி வந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சரும்ன மம்தா பானர்ஜி, இன்று பாராளுமன்ற வளாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.

ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி எம்.பி.யும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகளுமான மிசா பாரதி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதே போன்று திமுக எம்.பி. கனிமொழியையும் மம்தா பான்ர்ஜி இன்று டெல்லியில் சந்திப் பேசினார். இதனிடையே பாஜகவில் மோடிக்கு எதிராக உள்ள அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டவர்களை மம்தா நாளை  சந்தித்து ஆலோசனை நடத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.