இதே எனது சொந்த  பிரச்சினை தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானபோது அதை ஊடகங்கள் எந்த அளவிற்கு வைரல் ஆக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அது போன்ற வீடியோக்களெல்லாம் வைரலாகும் போது  ஒரு மாணவி மதமாற்றம் என்ற பெயரில் பாதிக்கப்படும் போது அதை வைரலாக்க கூடாதா?

மாணவி விஷம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் அந்த பள்ளி நிர்வாகத்தை கேள்வி கேட்காத ஊடகங்கள்தான் பத்ம சேஷாத்ரி விவகாரத்தில் எனது குடும்பத்தை, என் சாதியை, என் மதத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விமர்சித்தன என மதுவந்தி ஆதங்கம் தெரிவித்துள்ளார். பல யூடியூப் சேனல்கள் பார்ப்பனர் மதுவந்தி நடத்தும் பத்ம சேஷாத்ரி என்று என் தந்தை, என் பாட்டி பெயரை இழுத்து கொச்சைப்படுத்தின என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக பாஜகவின் சர்ச்சை பிரமுகர்களில் ஒருவர் தான் ஒய். ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி. இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். பல விஷயங்களில் பாஜகவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பேசியும், வீடியோ வெளியிட்டும் வருகிறார் மதுவந்தி. பணமதிப்பிழப்பு விவகாரத்தில் அவர் உளறிக் கொட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது, அதேபோல் எப்போதும் பிராமணர்களாக பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள் என்று அவர் பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதேபோல் மதுவந்தி குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் பிஎஸ்பி பள்ளி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த போது ஒட்டுமொத்த தமிழகமும் பள்ளி மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என குரல் கொடுத்தன. ஆனால் மதுவந்தி மட்டும் எத்தனை பேர் வந்தாலும் எனது பாட்டி கட்டிக்காத்த பிஎஸ்பிபி பள்ளி புகழுக்கும், அவர் உருவாக்கிய இந்த சாபணத்திற்கும் அவமரியாதை ஏற்படுத்துவதை ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என கடுமையாக எச்சரித்தார். அவரின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அவருக்கு எதிராக பலரும் சமூகவலைதளத்தில் கொதித்தெழுந்தனர். பல ஊடகங்களும் மதுவந்தி குற்றவாளிக்கு துணை போகிறார்கள் என்ற விமர்சன்த்தை முன் வைத்து வீடியோ வெளியிட்டன.

இந்நிலையில்தான் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேசிய அளவில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதாவது பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் கட்டாய மத மாற்றத்திற்கு வலியுறுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டியதே அதற்கு காரணம். மேலும் அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது பேசியதாக வீடியோ ஒன்றையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பின்னர் அந்த வீடியோ தேசிய அளவில் வைரலானது, அதேநேரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், தமிழகத்தில் மதமாற்ற தடைச்சட்டம் உடனே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து மாணவி பேசிய உண்மை வீடியோ என மேலும் ஒரு புதிய வீடியோ வெளியானது. அதில் மாணவி தன்னை மதமாற்றம் செய்ய யாரும் நிர்பந்திக்க வில்லை என கூறியிருந்தார். விடுதி நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகம் தன் இந்து மத அடையாளங்களையும், செந்தூர் போட்டு வைக்கக்கூடாது என்று ஒருபோதும் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். அதன்மூலம் மாணவி மதமாற்றம் செய்ய நிர்பந்திக்கப்படவில்லை என்பது உறுதியானது. இந்த விவகாரத்தில் மாறிமாறி வீடியோ வெளியாகி குழப்பம் ஏற்பட்ட நிலையில்தான், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் குழு ஒன்று தமிழகம் அனுப்பப்பட்டது. அந்த குழு உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களை சந்தித்து விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை ஜே.பி நட்டாவிடம் வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. 

பலரும் பல வகையில் கருத்து கூறி வருகின்றனர், வழக்கம்போல பாஜக செயற்குழு உறுப்பினர் மதுவந்தி மதமாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதால்தான் மாணவி உயிரிழந்துள்ளார் என கூறியிருக்கிறார். இதுதொடர்பாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவரிடம் நெறியாளர் முன்வைத்த பல கேள்விகளுக்கு அவர் காட்டமாக பதில் அளித்துள்ளார் . அதன் விவரம் பின்வருமாறு:- ஒருவர் விரும்பி மதம் மாறினால் அதை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை, ஆனால் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபொழுது அவரை கட்டாயப்படுத்தி மதம் மாற சொல்வது அபத்தம். அதனால்தான் ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. இதை யார் செய்தாலும் பாஜக அவர்களைக் கேள்வி கேட்கும். அந்த மாணவி கொடுத்த வாக்குமூலமே மதமாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது. அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்பியதால்தான் தற்போது அந்த மாணவியின் விவகாரம் இந்த அளவிற்காவது கவனம் பெற்றிருக்கிறது. இல்லை என்றால் அது பூசி மெழுகப்பட்டிருக்கும். ஆனால் அந்த மாணவி மைனர் என்பதால் அந்த வீடியோவைப் பகிர கூடாது என சிலர் கூறி வருகின்றனர்.

இதே எனது சொந்த பிரச்சினை தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானபோது அதை ஊடகங்கள் எந்த அளவிற்கு வைரல் ஆக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அது போன்ற வீடியோக்களெல்லாம் வைரலாகும் போது ஒரு மாணவி மதமாற்றம் என்ற பெயரில் பாதிக்கப்படும் போது அதை வைரலாக்க கூடாதா? இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவை மாறி மாறி கேள்வி கேட்கும் ஊடகங்கள், ஏன் இதுவரை அந்த மாணவி உயிரிழக்க காரணமாக இருந்த பள்ளி நிர்வாகத்தை கேள்வி கேட்கவில்லை? இதே பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது என்னையும், எனது குடும்பத்தையும், எனது சாதியையும், எனது மதத்தையும் நடுத்தெருவில் நிறுத்தி ஊடகங்கள் விமர்சித்தன. என்னை சாதிப் பெயரைச் சொல்லி விமர்சித்தன, ஆனால் இப்போது அந்த பள்ளி நிர்வாகத்தை ஊடகங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இதுதான் இந்த ஊடகங்களின் லட்சணம்,இவ்வாறு அதில் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.