பிரதமர் நரேந்திர மோடியை மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று காலை சந்திக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்கு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 25-ம் தேதி எம்.பி.யாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். எம்.பி.யாகப் பொறுப்பேற்க டெல்லிக்கு வைகோ சென்றபோது, பாஜகவின் பல்வேறு  தலைவர்களை வைகோ சந்தித்தார். பிரதமர் மோடியையும் வைகோ சந்தித்து பேசினார்.


பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மோடியையும் அவருடைய அரசையும் கடுமையாக விமர்சித்துவருகிறேன். ஆனால், மோடி என்னை வரவேற்று பேசினார். சில முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமருடன் பேசினேன். அதைப் பற்றி இப்போது வெளியே சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை வைகோ இன்று மீண்டும் சந்திக்க இருக்கிறார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்க வைகோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது தமிழக நலன்கள், பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் வைகோ எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்துக்குள் பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக வைகோ சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.