Asianet News TamilAsianet News Tamil

துரை வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்கள்..! நிரந்தரமாக நீக்கி வைகோ அதிரடி உத்தரவு

மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்களை நீக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.

Mdmk district secretaries sacked for protesting against Durai Vaiko  Vaiko orders
Author
Tamilnadu, First Published May 23, 2022, 1:08 PM IST

துரை வைகோவிற்கு எதிர்ப்பு

மதிமுகவில் தலைமை பொறுப்பில் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு ஒரு சில மூத்த  தலைவர்கள் கடும் எதிப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுக கட்சியை ஆரம்பித்து விட்டு தனது வாரிசை பதவியில் அமர வைத்துள்ளதாக   சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களும், மதிமுக ஒரு சில மூத்த தலைவர்களும்  குற்றம் சாட்டினார். எனவே திமுகவோடு மதிமுகவை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ஒருமனதாக தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார்.மேலும்  கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Mdmk district secretaries sacked for protesting against Durai Vaiko  Vaiko orders

விளக்கம் அளிக்க உத்தரவு

இந்தநிலையில் 3 மாவட்ட செயலாளர்களை தற்காலிகமாக நீக்கி கடந்த ஏப்ரல் மாதம் வைகோ உத்தரவிட்டார். தொடர்ந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படியும் கூறியிருந்தார். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திரு புலவர் சே.செவந்தியப்பன், திரு ஆர்.எம்.சண்முகசுந்தரம், திரு டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக் கழகம் தாயகத்தில், 11.05.2022 அன்று காலை 11 மணிக்கு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடைபெற உள்ளது என்றும், அதில் கலந்து கொண்டு, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், 29.04.2022 அன்று அவர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு நேரில் வந்து மூவரும் விளக்கம் அளிக்காமல், 07.05.2022 மற்றும் 09.05.2022 தேதியிட்ட கடிதங்களை கழகப் பொதுச்செயலாளருக்கு அனுப்பி உள்ளனர். அக்கடிதத்திலும், 05.04.2022 மற்றும் 18.04.2022 அன்று, அவர்களுக்கு அனுப்பப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த புகார்களுக்கு உரிய விளக்கம் கூறாமல், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தங்களை விசாரிக்க, தார்மீக உரிமை இல்லை என்று கூறி இருக்கின்றார்கள்.

Mdmk district secretaries sacked for protesting against Durai Vaiko  Vaiko orders

நிரந்தரமாக நீக்கி வைகோ உத்தரவு

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான மேற்கண்ட மூவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் மற்றும், அவர்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆராய்ந்தது. அதன் அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்துள்ள பரிந்துரை மற்றும் கழக சட்டதிட்ட விதி எண் 19, பிரிவு-12 மற்றும் விதி எண் 33, பிரிவு-5 இன் கீழும், திரு புலவர் சே.செவந்தியப்பன்,  திரு ஆர்.எம். சண்முகசுந்தரம், திரு டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கழகத்தில் அவர்கள் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றார்கள் என்று, இதன் மூலம் அறிவிக்கப்படுவதாக வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios