ஸ்டாலினுடன் வைகோ நெருங்கி அரசியல் செய்வதை தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை! என்று பல விஷயங்களை மேற்கோள்காட்டி நமது இணைய தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

இதை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் நடந்த தி.மு.க.வின் மண்டல மாநாட்டில் துரைமுருகன் வெளிப்படையாக மைக்கில், ‘இந்த இரு நாள் மேடையில் நம் கழகத்தினர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறோம். அதற்கு தளபதிக்கு நன்றி. வேறு யாராவது வந்து பேச ஆரம்பித்தால் எங்களுக்கெல்லாம் நேரம் கிடைத்திருக்குமோ, என்னவோ?’ என்று நக்கலடித்தார். 

வைகோவை மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைக்காததைத்தான் இப்படி துரைமுருகன் சொல்லி சந்தோஷப்படுகிறார்! என்று பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இதையும் நமது இணையதளம் நேற்று ‘மைலேஜ் கவரேஜ்’ ஆக தந்திருந்தது. 

இந்நிலையில் வைகோவுக்கு தி.மு.க. முக்கியஸ்தர்களால் ஏற்படும் அவமானத்துக்கு ம.தி.மு.க.வினர் ரியாக்ட் செய்ய துவங்கிவிட்டனர். தங்களது சமூக வலைதள பக்கங்கள், வாட்ஸ் அப் குரூப்புகள் ஆகியவற்றில் துரைமுருகனை துவைத்தெடுக்க துவங்கிவிட்டனர். 
குறிப்பாக...

“தி.மு.க.வினரை தவிர வேறு யாரும் மண்டல மாநாட்டு மேடையில் ஏறவில்லை என்று கொக்கரித்த துரைமுருகனே, சுப. வீரபாண்டியன் என்ன உங்கள் கட்சியின் தலைமை கழக பேச்சாளரா? திராவிட இயக்க தமிழர் பேரவை என்ற பெயரில் அமைப்புதானே நடத்திக் கொண்டிருக்கிறார் சுப.வீ? அவர் எப்படி உங்கள் கட்சிக்காரர் ஆகிட முடியும்? 
’சுதந்திர சிந்தனைகள் மீதான வன்முறை’ எனும் தலைப்பில் உரையாற்றியிருக்கிறாரே உங்கள் மாநாட்டில். அப்படியானால் சுப.வீ உங்கள் கட்சியில் இணைந்துவிட்டாரா? தன் அமைப்பை கலைத்துவிட்டாரா? இது உண்மையென்றால் சுப.வீ!யையே இதைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். 

அல்லது சுப.வீரபாண்டியன் தி.மு.க.வை சேராதவர்! என்பது கூட புரியாமல் ஏதோ ஞாபகத்தில் மாநாட்டு மேடையில் நீங்கள் உட்கார்ந்திருந்தீர்களா? கொடியேற்று வைபவத்தில் தொண்டர்கள் நசுக்கிய நசுக்கில் உங்களது மூளை தடம் புரண்டுவிட்டதா மிஸ்டர். துரை?” என்று போட்டுப் பொளந்துள்ளார்கள். 

துரையின் பொளேர் பதிலடி என்னவாக இருக்கும்?!
அவர் சொன்னதும் அதையும் எழுதுவோம்!...