திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு தொகுதி அக்கட்சிக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு மதிமுகவுக்கு 1+1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதற்கு முன்பாக 3 தொகுதிகளை வைகோ கேட்டுவந்தார். தனக்கு திருச்சி தொகுதியும், மதிமுக பொருளாளர் கணேசமூர்த்திக்கு ஈரோடு தொகுதியையும், தன் சகா மல்லை சத்யாவுக்கு ஒரு தொகுதியையும் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தொடக்க முதலே 2 தொகுதிகளுக்கு மேல் திமுக ஏறி வரவில்லை. கடைசியில் 1+1 என தொகுதி உடன்பாடு முடிவானது. 
இதன்மூலம் மாநிலங்களவை இடத்துக்கு வைகோ தேர்வு செய்யப்பட உள்ளார். வரும் ஜூன் மாதத்துக்கு பிறகு திமுக உதவியுடன் வைகோ எம்.பி.யாகப் பொறுப்பேற்க இருப்பது உறுதியாகிவிட்டது. மதிமுகவுக்கு மக்களவைக்கு ஒதுக்கப்பட்ட ஒரே ஒரு தொகுதி எது என்பதில் உள்ள சிக்கல் இன்னும் தீரவில்லை. அந்த ஒரு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்குதான் பிரச்சினை உள்ளது. ஈரோடு தொகுதிக்கு ஏற்கனவே துண்டு போட்டுவிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காத்திருக்கிறார். ஈரோடு தனக்குதான் என அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், விரும்பும் தொகுதியை திமுக அளிக்கும் என மதிமுக தரப்பில் உறுதியாகக் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் இளங்கோவன் போட்டியிட்டதால், அந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு திமுக வழங்கும் என்றும் மதிமுகவினர் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி இதை ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. இந்த முறை எப்படியும் வெற்றி பெற்று எம்.பி.யாக செல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ள இளங்கோவன் தான் விரும்பும் தொகுதியை இழக்க முன்வருவாரா என்றும் தெரியவில்லை. 
அதேவேளையில் ஒரே ஒரு தொகுதியைப் பெற்றுள்ள மதிமுகவுக்கு விரும்பிய தொகுதியாவது கிடைக்குமா என்பது மதிமுகவினரின் எதிர்பார்ப்பு.