மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு சீட்டு மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால், அக்கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திமுகவிடம் ஒரு மட்டுமே பெற்றதால், கட்சியை விட்டு விலகுவதாக சீர்காழி மதிமுக நகர செயலாளர் அறிவித்துள்ளார். 
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு மக்களவையில் ஒரு தொகுதியும் மாநிலங்களவையில் ஒரு இடமும் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டது. மூன்று சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியில் ஸ்டாலினும் வைகோவும் சேர்ந்து தேர்தல் உடன்பாட்டை நிறைவு செய்தனர். வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு பெற்றதை மதிமுகவினர் வரவேற்றாலும், மக்களவைத் தொகுதியில் ஒரு தொகுதி மட்டுமே பெற்றதால் அதிருப்தி அடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 2+1 என்ற தொகுதிகளையாவது பெற்றிருக்கலாம் என்கிறார்கள் மதிமுகவினர்.


இதுதொடர்பாக மதிமுக தொண்டர்களிடம் பேசியபோது, “வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் தரும் முடிவு நல்ல விஷயம்தான். ஆனால், மக்களவையில் ஒரே ஒரு தொகுதிக்கு எப்படி உடன்படலாம்? இதே திமுக கூட்டணியில் 1999-ல் 5 தொகுதிகள், 2004-ல் 4 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டதே. வழக்கமாக 2 தொகுதிகளில் போட்டியிடும் இடதுசாரிகளுக்கு அதே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள மதிமுகவையும் ஒரே அளவுக்கோலில் பார்ப்பது நியாயமா? குறைந்தபட்சம் 2+1 என்ற தொகுதிகளைவாயது திமுக வழங்கியிருக்க வேண்டும்” என்று ஆதங்கடத்துடன் கூறுகிறார்கள்.
சமூக ஊடகங்களில் மதிமுகவினர் பலரும் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திவருகிறார்கள். இந்நிலையில் நாகப்பட்டினம் சீர்காழி நகர மதிமுக செயலாளர் பாலு, மதிமுகவிலிருந்து விலகுவதாக தன் முகநுால் பக்கத்தில் அறிவித்தார். அவருடைய பதிவில், 'மதிமுகவுக்கு லோக்சபா தேர்தலில் சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. தளபதி ஸ்டாலின் அவர்களே, அண்ணன் வைகோவை எந்த இடத்திலும் கைவிட மாட்டேன் எனக் கூறிவிட்டு கழுத்தை அறுத்து விட்டீர்களே. மரண வலியுடன் பொதுக்குழுவை, நான் புறக்கணிக்கிறேன். கனத்த இதயத்துடன் மதிமுகவிலிருந்து வெளியேறுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாலுவை வைகோ தொடர்புகொண்டு சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இன்று சென்னையில் நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து வைகோ கட்சியினரிடம் பேசுவார் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.