ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அப்படி இருந்த போதிலும் கொரோனா பரவல் அதிகமாகிவருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஒரு வார முழு ஊரடங்கை அறிவித்துள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சேவைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்துக் காப்பாற்றிடும் வகையில், ஆக்ஸிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவையுள்ள பகுதிகளுக்கு ரயில்களின் மூலம் ஆக்ஸிஜன் கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மருத்துவமனைகளில் திரவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி மக்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, ஆக்ஸிஜன் தயாரித்து தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி தருமாறு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கூடுதலாக ஆக்ஸிஜன் சேமிப்புக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படியும், இதற்காக அனுமதி கோரும் நிறுவனங்களுக்குத் தற்காலிக அனுமதி அளிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ’ரிலையன்ஸ் நிறுவனம்’ தனது தொழிற்சாலைகளிலிருந்து திரவ ஆக்ஸிஜன் வழங்கி உதவியது.

அதைப்போல ஆக்ஸிஜன் பற்றாக்குறையுள்ள இந்த நேரத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இலவசமாகவே சப்ளை செய்யக் காத்திருக்கிறோம். இதற்காகாக அனுமதி அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 1,050 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்திக்கூடத்தில் தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனுப்ப தயாராக இருக்கிறோம். அத்துடன் ஆலையைப் பராமரிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கை மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகி இருந்த மத்திய அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா கொரோனா விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆகையால், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி தரலாம். நாட்டில் கொரோனா அதிகரித்து ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ளதால் அனுமதி தரலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஒச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது.