ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் தொடர்ந்து ஒத்திவைப்பு கோரிக்கை வைத்து வந்ததால் நீதிபதி ஓ.பி.ஷினி கோபடைந்துள்ளார். 

\

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஏர்செல்- மேக்சிஸ் வழக்கை ஒத்திவைக்குமாறு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு அவர்கள் சொன்ன காரணம், ‘ப.சிதம்பரத்துக்கு எதிராக ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இவ்வழக்கைத் தற்போது ஒத்திவைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர். இதனால் கொதிப்படைந்த சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, வழக்கை ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் தொடர்ந்து ஒத்திவைப்பு கோரிக்கை வைத்து வந்ததால் நீதிபதி சைனி கோபடைந்தார். அவர், “வழக்கை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. தினம் தினம் அதைத்தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த ஒரு ஆண்டாக உங்களது வாதம் அதுவாக மட்டுமே இருந்திருக்கிறது. இதனால் எனக்கு அவமானமாக உள்ளது. செப்டம்பர் 3 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்” என்று உத்தரவிட்டார். அதுவரை ப.சிதம்பரத்தை ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கைது செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை, ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குகளில் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம்தான் சம்பந்தப்பட்டு இருக்கிறது என்றும், எனவே இரு வழக்குகளும் ஒரே தன்மையுடயவை என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டது. அதை மறுத்த நீதிமன்றம், இதைப் போன்ற நூற்றுக்கணக்கான வழக்குகள் இருக்கின்றன என விளக்கம் கொடுத்தது.