தனியார் பள்ளிகளில் வர்த்தக நோக்கத்துடன் செயல்படும் பயிற்சி மையங்கள், பள்ளி வளாகத்திற்குள் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளில் மாணவர்களை கட்டாயப்படுத்தி நீட் தேர்வு, ஐஐடி உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி நேரங்களில் பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் எடுக்கக்கூடாது. நீட் தேர்வு சிறப்பு பயிற்சி என்ற பெயரில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. 

மாணவர்களை எந்தவொரு பயிற்சி வகுப்பிலும் சேருமாறு கட்டாயப்படுத்த கூடாது. பள்ளி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்திருப்பதை விட எந்த விதத்திலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதையும் மீறி பள்ளி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.