காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா மீதான மோசடி வழக்கை மீண்டும் மத்திய பிரதேச அரசு விசாரிக்கத்  தொடங்கியுள்ளது மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் திடீரென்று ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் விலகினார் அது மட்டுமல்லாமல் அவருடன் சுமார் 22 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததால் மத்தியபிரதேச அரசியலில் பதற்றம். ஏற்பட்டுள்ளது.  மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது . 

 

காங்கிரசில் இருந்த விலகிய எம்எல்ஏக்கள் அதற்கான கடிதத்தை கவர்னர் மற்றும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர் .  இதனால் பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிராதித்யா பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து பாஜகவில் இணைந்தார் .  இந்நிலையில் அவர் பாஜகவில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் .  இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கையாக இருந்த ஜோதிராதித்யா திடீரென பாஜக தரும்  பதவிக்காக கட்சியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல்  22  எம்எல்ஏக்களுடன் காங்கிரசிலிருந்து விலகியது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஆட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா மீதான வழக்கின் விசாரணையை மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.  சுமார் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை பலமுறை விற்று மோசடி செய்த வழக்கில் சிந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என புகார்  தெரிவிக்கப்பட்டிருந்த  நிலையில் புகாரை மாநில பொருளாதார குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க தொடங்கியுள்ளது . 

இது குறித்து தெரிவித்துள்ள குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் ஜோதிராதித்யாவுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் 2018ம் ஆண்டு முடிக்கப்பட்டது,  அவர் மீது மீண்டும் புகார் அளித்ததால் அதிலுள்ள உண்மையை விசாரிக்க உள்ளோம் என அவர் கூறியுள்ளார் அவர் மீது போடப்பட்ட வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .