சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா வாயிலாக, திமுக., - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில், பிஜேபி தோல்வி அடைந்ததால் தமிழகத்தில் உள்ள, 40 தொகுதிகளையும், பிஜேபி, கூட்டணி கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும், திமுக.,வுடன் தொகுதி பங்கீடு பிரச்னை ஏற்பட்டு, காங்கிரஸ் தலைமையில், அமமுக - பாமக., - தேமுதிக, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் இணைந்த, மூன்றாவது அணி அமைக்க முடியாத அளவிற்கு, ஸ்டாலின்  பக்காவாக மூவ் செய்திருக்கிறார்.  அதுமட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் பதவிக்கு, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி, சரத் பவார் போன்ற தலைவர்கள் போட்டி போடுவதற்கும் கலைஞர் ஸ்டைலில் விழாவிலே ஆப்படித்து அனுப்பியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐந்து மாநிலத்தை பறிகொடுத்த சோகத்தில் இருக்கும் பிஜேபி, திமுக., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக, அதிமுக,  கூட்டணி அமைத்தாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே,  சிதறியுள்ள, அதிமுக தான், அக்கட்சி ஒன்றானால் ஓட்டுகள் மொத்தமாக சிதறாமல் அப்படியே அள்ளலாம் என டெல்லி மேலிடம் கருதுகிறது. எனவே, அதிமுக., - அமமுக, இணைய வேண்டும் என்ற விருப்பத்தை, பிஜேபி, மேலிடம், முதல்வர் பழனிசாமி தரப்புக்கு தெரிவித்துள்ளது. தமிழக தலைவர் ஒருவர் வழியாக, இதற்கு துாதும் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து, இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. 

இரு கட்சிகளும் இணைந்த பின், முதல்வர் பதவிக்கு பழனிசாமியும், துணை முதல்வர் பொதுச்செயலாளர் பதவிக்கு பன்னீர் செல்வமும், துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தினகரனும் தேர்வு செய்யப்படலாம் என, பேசப்பட்டுள்ளது. மேலும், அவைத் தலைவர் பதவிக்கு பொன்னையன், பொருளாளர் பதவிக்கு செங்கோட்டையன் ஆகியோர் தேர்வு செய்யப்படுவது குறித்தும், இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டு உள்ளது.

இதில், பொதுச்செயலர் பதவியை, சசிகலாவுக்கு தர வேண்டும் என்றும், தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும், தினகரன் முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், முரண்டு பிடிக்கும் தினகரனை, 'கழற்றி' விட்டு, மற்றவர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டமும், இரு தரப்பிலும் உள்ளது. அதேபோல், பொதுச்செயலாளர், முதல்வர், இரண்டு பதவிகளும், தனக்கு வேண்டும் என, பழனிசாமியும் கொடி பிடிப்பதாக கூறப்படுகிறது. இதில், எதற்கும் உடன்படாத பன்னீர்செல்வம், தனக்கு ஒரு பதவி மட்டும் போதும் என, ஒதுங்க பார்க்கிறார்.

இந்நிலையில், நேற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, தினகரனும், அவரது ஆதரவாளர்களும் சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இந்த ஆண்டின் இறுதிக்குள், இரு கட்சிகளும் இணைந்து விட்டால், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு மற்றும் தினகரன் மீதான தேர்தல் கமிஷன் வழக்கு உள்ளிட்ட, அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.

இந்த இணைப்பிற்கு பின், அமைச்சரவையிலும், தினகரன் ஆதரவாளர்களுக்காக, சில மாற்றங்கள் செய்யப்படும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அதிமுக, ஆட்சியை தக்க வைப்பதற்கும், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை, அ.தி.மு.க., கூட்டணியுடன் சந்திப்பதற்கும், பிஜேபி விரும்புகிறது. ஒன்றுபட்ட, அதிமுகவுடன், பிஜேபி- பாமக, - தேமுதிக, கட்சிகளும் சேர வாய்ப்பு உள்ளது என அதிமுக வட்டாரங்கள் கூறின.