காங்கிரஸ், திமுகவை சேர்ந்த சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் பலரையும் அதிமுக செய்தித் தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகு ராஜ் அதிமுகவுக்கு அடுத்தடுத்து அழைத்து வந்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். 

கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் பிஸியாக இருக்கும் மருது அழகு ராஜ், சிவகங்கை மாவட்டத்தில் கட்சிப்பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். திமுக எம்.எல்.ஏ பெரியகருப்பனை எதிர்த்து திருப்பத்தூர் தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக மருது அழகுராஜை களமிறக்க எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பி.எஸும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சொந்த ஊரில் தங்கி இருந்து நிவாரண நிதி, கட்சிப்பணிகளை கவனித்து வரும் அவர், 26 ஆண்டுகளாக புதூர் ஒன்றிய பொறுப்பில்  இருந்த திமுகவை சேர்ந்த ஜெகநாதனை அதிமுகவில் இணைத்து விட்டார். ஜெகநாதன் நாதஸ்வரம் என்ற சின்னத்திரை சீரியலில் முக்கிய வேடத்தில் நடிது புகழ்பெற்றவர். அத்தோடு திருப்பத்தூர் தொகுதியில் கணிசமாக உள்ள முத்தரையார் சமூகத்தில் முக்கியமான நபராகவும் கருதப்படுபவர். 

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரும், கல்லல் ஒன்றிய துணை சேர்மன் கொங்கரத்தி நாராயணனையும் அதிமுகவிற்கு அழைத்து வந்துள்ளார் மருது அழகு ராஜ். கொங்கரத்தி நாராயணன் அதிமுகவுக்கு வந்து விட்டதால் கல்லல் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக விரைவில் இழக்கப்போகிறது.

இன்று ரணசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், திமுகவில் மாவட்ட பொறுப்பில் இருக்கிற ஞானசேகர் தலைமையில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் மருது அழகுராஜ் முன்னிலையில் இணைந்துள்ளனர். இந்த ஞானசேகர் திமுக எம்.எல்.ஏ., பெரியகருப்பனின் உறவுக்காரர். இதேபோல் இன்னும் பலரை அதிமுகவுக்கு அழைத்துவர மருது அழகுராஜ் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.