கோட்டை டூ கொடநாடு வரை எடப்பாடி அரங்கேற்றி இருக்கும் பாவங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது -மருது அழகு ராஜ்
எம்ஜிஆர் அவர்களின் மாற்றக்கூடாத விதிகளையும், அவர் தம் தொண்டர்களுக்கு தந்துபோன உரிமைகளையும் பறித்த அபகரிப்பு பழனிசாமி தான், தன் ஆயுள் எல்லாம் புரட்சித்தலைவரின் போட்டோவை வைத்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என மருது அழகு ராஜ் தெரிவித்துள்ளார்.
யார் மன்னிப்பு கேட்க வேண்டும்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேருபவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓ.பன்னீர் செல்வத்தின் அணியை சேர்ந்த மருது அழகு ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் திலகத்தின் மாற்றக்கூடாத விதிகளையும், அவர் தம் தொண்டர்களுக்கு தந்துபோன உரிமைகளையும் பறித்த அபகரிப்பு பழனிசாமி தான்,
தன் ஆயுள் எல்லாம் புரட்சித்தலைவரின் போட்டோவை வைத்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். அது மட்டுமா? புரட்சித்தலைவி தந்து விட்டு போன அரசாட்சியை பயன்படுத்தி சம்பந்திகளோடும், தன் சகாக்களோடும் கூடி நாலரை வருட ஆட்சியை பயன்படுத்தி பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து விட்டு நீதிமன்றங்களில் தலை தப்புமா?
எடப்பாடி தான் மன்னிப்பு கேட்கனும்
என தவம் கிடக்கும் எடப்பாடி தான். அம்மாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை பறித்திட்ட குற்றத்திற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். கழகத்திற்கு இவ்வுலகம் தந்த பரதன் என்று அம்மா அடையாளம் காட்டிய தப்பில்லா தங்கமகன். விசுவாசம் என்ற சொல்லுக்கு விலாசமாக வாழும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸை பொதுக்குழு என்னும் பெயரில் பொறுக்கிகளை கூட்டி வைத்து தண்ணீர் பாட்டில் வீசி, அவரது தாயை ஏசிய தரங்கெட்ட நடத்தைகளுக்காக தரையில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டியது எடப்பாடி தான்..
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை மூடி மறைக்க குதிரை பொம்மையும், இரண்டு கடிகாரமும் காணாமல் போனதாக கணக்கு எழுதி கதையை முடிக்க திட்டமிட்டதோடு, கொடநாடு பங்களா ஒரு தனியாரது வீடு, அதற்கு எதற்காக அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்று நன்றி மறந்து பேசிய,
கூவத்தூர் குத்தகைதாரர் பழனிசாமி
கூவத்தூர் குத்தகைதாரர் பழனிசாமி தான் சட்டத்தின் முன்பும், சமூகத்தின் முன்பும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு ஓட்டில் இருவர் தேர்வு என்று கிளைக் கழகம் தொடங்கி ஒருங்கிணைப்பாளர்கள் வரை தேர்தல் நடத்தி முடித்து விட்டு தேர்தல் ஆணையத்திடம் சான்றிதழும் பெற்றுவிட்டு இப்படி ஜனநாயக காவலர் போல் நடித்து விட்டு கட்சியை அபகரிக்க கரன்சியை அள்ளி வீசி பொதுக்குழு ஆடுகளை விலைபேசி வளைத்துக் கொண்டு ஊரையும், உலகத்தையும் ஏமாற்றிய எடப்பாடி தான் கூனி குறுகி நின்று கும்பிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்..
இபிஎஸ்க்கு மன்னிப்பே கிடையாது
ஆக, ஊர் சொத்தை திருடியவன் ஊரார்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கை வைப்பதற்கு சமமானது தான்.. ஜனநாயகத்தை வலியுறுத்தி சங்கநாதம் இசைக்கும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்களை எடப்பாடி மன்னிப்பு கேட்கச் சொல்வதாகும். எனவே எடப்பாடியின் இடிஅமீன் இறுமாப்புக்கும் கரன்சி கர்வத்துக்கும் கோட்டை முதல் கொடநாடு வரை அவர் அரங்கேற்றி இருக்கும் அடுக்காத பாவங்களுக்கும் மன்னிப்பு என்பதே கிடையாது என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் ரீ என்ட்ரி.. ஓபிஎஸ் அணி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அழைப்பு?