சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வீட்டு திருமண விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் திமுக எம்பி கனிமொழியும் சந்தித்துக் கொண்டனர்.

திமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் விக்கிரமராஜா. வணிகர் சங்கங்களின் பேரவை எனும் ஒரே ஒரு வணிகர்களுக்கான சங்கம் தான் தமிழகத்தில் கோலாச்சியிருந்தது. அந்த அமைப்பின் தலைவரான வெள்ளையன் தீவிர திமுக எதிர்ப்பாளராக இருந்தார். இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வணிகர் சங்க பேரவையை உடைத்து வணிகர் சங்க பேரமைப்பை தொடங்கியவர் விக்கிரமராஜா. இதன் பின்னணியில் ஸ்டாலின் இருந்ததாக அப்போதேபேச்சு அடிபட்டது.

இந்த நிலையில் விக்ரமராஜாவின் மகன் பிரபாகர் திமுகவின் பகுதிச் செயலாளராக உள்ளார். அவரது திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. திமூக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். திமுகவுடன் நெருக்கமாக இருந்தாலும் தமிழக அமைச்சர்கள் பலருடன் விக்ரமராஜாவுக்கு பழக்கம் உண்டு. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விக்ரமராஜா மகன் திருமணத்திற்கு வந்திருந்தார்.

மணமக்களை வாழ்த்திவிட்டு விஜயபாஸ்கர் மண்டபத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி அங்கு வருகை தந்தார். இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள நேரிட்டது. புன்முறுவலுடன் விஜயபாஸ்கர் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு கனிமொழியும் வணக்கம் தெரிவித்ததுடன் என்ன அமைச்சரே எப்ப இருக்கீங்க? என்று கேட்க, ரொம்ப நல்லா இருக்கேன் மேடம் என்று பதில் அளித்ததுடன் கனிமொழியையும் நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டார் விஜயபாஸ்கர்.

திமுக அனுதாபி ஒருவர் திருமண வீட்டில் அதிமுகவின் முக்கியஅமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றதே பலரது புருவங்களை உயர்த்தியது. ஜெயலலிதா இருக்கும் போது இதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால் தற்போது திருமணத்தில் பங்கேற்றதுடன் திமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான கனிமொழியிடம் நலம் விசாரிக்கும் அளவிற்கு தமிழகத்தில் அரசியல் நாகரீகத்திற்கான இடம் கிடைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இது ஒருபுறம் இருக்க ஒரே நேரத்தில் கனிமொழி – விஜயபாஸ்கர் வந்த நிகழ்வை திருமணத்திற்கு வந்தவர்கள் போட்டி போட்டு பார்க்க, அந்த இடமே கலகலத்துப்போனது.