மேல் மட்டத்தில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படுவதால் மு.க.ஸ்டாலினின் மிசா வீடியோ தாமதம் ஆகிறது. இந்த தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். 

மிசா சர்ச்சை நீடித்து வரும் நிலையில் தனது முகநூல் பக்கத்தில், மாரிதாஸ் நேற்று,’’அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று மிசா பற்றிய முழு ஆதாரங்களுடன் கூடிய பதிவினை வெளியிடப்படும். திமுக மற்றும் திக நிர்வாகிகளும் கட்டாயம் பார்த்துப் பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திமுக நிர்வாகி எவரோ ஷா கமிஷன் முழுவதும் படித்துவிட்டேன் ஆதாரங்கள் பல அதில் திமுக பற்றி உள்ளது என்று கீழ்த்தரமான பொய்யை அவிழ்த்துவிட்டார். அவர் போன்றவர்களும் பார்க்க வேண்டும். (உங்கள் திக திமுக தலைவர்கள் முன்பு சொன்ன பொய்களுக்குத் தான் இன்று திமுக திக மானம் போகிறது. இது போதாதென்றும் அடுத்தடுத்து பொய் சொல்லிச் சமாளிக்க முயற்சிக்க வேண்டாம். இது 1970கள் அல்ல. 2019 என்பதை நினைவில் கொள்ளவும்.}

ஆனால் ஒரு உண்மை தமிழகத்தில் அரசியல் கட்சியாக திமுக கட்சியினர் தான் அதிகம் மிசா கைதிகளாகக் கைது செய்யப்பட்டனர். சுமார் 419பேர். தமிழகம் முழுவதும். இது உண்மை ஆனால்... ஏன், எப்படி , எப்போது என்பது தான் கேள்வி. இன்று மாலை மிசா சிறப்பு காட்சி வெளியிடப்படும்’’எனத் தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில் அவர் சொன்னது போல் அந்த வீடியோ வெளியாகவில்லை.

அது குறித்து இன்று விளக்கமளித்துள்ள மாரிதாஸ், ‘’நேற்று வெளியிடுவதாக இருந்த வீடியோ பதிவை நான் நேற்று காலை முடித்துவிட்டேன். ஆனால் மேல் மட்டத்தில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படுவதால் தாமதம் ஆகிறது. இந்த தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து சிக்கலையும் முடித்து, அனைத்து முக்கிய நபர்களுக்கும் போதுமான விளக்கம் கொடுத்துவிட்டு, இன்று வீடியோவை கட்டாயம் வெளியிடுவோம்’’எனத் தெரிவித்துள்ளார். 

அவர் மேல்மட்ட அழுத்தம் எனக் கூறியிருப்பது, திமுகவிலிருந்து மேல்மட்ட அழுத்தமா? அல்லது பாஜகவின் மேல்மட்ட அழுத்தமா? என்கிற சந்தேகம் எழுகிறது.