மத்திய பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களை முக்கிய காரணம் என்று கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். கோவாவை சேர்ந்த பாரிக்கர் அம்மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் இருந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கோவா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அப்போது, மனோகர் பாரிக்கர் மாநில அரசியலுக்கு திரும்பினால் பாஜகவுக்கு ஆதரவு அளி்ப்போம் என்று பிராந்திய அரசியல் கட்சிகள் கூறின. இதையடுத்து, அவர் மாநில அரசியலுக்கு திரும்பியதால் கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது. முதல் அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- நான் பாதுகாப்பு அமைச்சராக டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் மிகுந்த நெருக்கடி அளித்தன.

இதனால்தான் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக நேரிட்டது. டெல்லியில் இருந்தால் நான் காஷ்மீர் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

டெல்லி சூழலில் நான் பணியாற்றியது குறைவு. அதனால்தான் நான் நெருக்கடியில் இருப்பதை போன்று உணர்ந்தேன். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது என்பது சாதாரண காரியம் அல்ல.

அதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும். குறைவாக பேசி அதிக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நாம் தீர்வு காண வேண்டிய பிரச்னைகளுக்கு மிகக் குறைந்த அளவுக்குத்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

பாதுகாப்பு துறையை ஒருவர் கூடுதலாக கவனிக்கக் கூடாது. அதை மட்டுமே ஒரு அமைச்சர் கவனித்தால்தான் சவால்களை எதிர்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் இவ்வாறு பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து பாரிக்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பொறுப்பை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூடுதலாக கவனித்து வருகிறார்.