மன்னார்குடியில் கடந்த மாதம் டி.டி.வி தினகரன் நடத்திய கூட்டத்திற்கு போட்டியாக அ.தி.மு.க சார்பில் அமைச்சர் காமராஜ் நடத்திய கூட்டம் பிசுபிசுத்துப்போனது. கடந்த மாதம் திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் டி.டி.வி தினகரன் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். பெண்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்களுக்கான டோக்கன், ஆண்களுக்கு ரூ.300 பணம் உள்ளிட்டவற்றை கொடுத்து தினகரன் ஆதரவாளர்கள் பெரும் கூட்டத்தை கூட்டியதாக புகார் எழுந்தது. ஆனால் தினகரன் பேசி முடிக்கும் வரை கூட்டத்தில் இருந்தவர்களை அவரது ஆதரவாளர்கள் அங்கேயே அமர வைத்திருந்தனர். 

அந்த கூட்டத்தில் பேசிய தினகரன் தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் சாம்பார் வாளி தூக்கிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் அமைச்சராக்கினோம் என்று பேசினார். ஆனால் அவர்கள் நன்றி மறந்து தற்போது அமைச்சர்களாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருவாரூரில் உள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜை சுட்டிக்காட்டியே தினகரன் இவ்வாறு பேசியதாக அப்போது சொல்லப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்க தினகரன் கூட்டம் நடத்திய அதே இடத்தில் அ.தி.மு.க சார்பில் காமராஜ் கூட்டம் நடத்தினார். சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பங்கேற்றார். பிரமாண்ட மேடை, ஏராளமான சேர்கள், தடபுடலாக பிளக்ஸ் பேனர்கள் என்று டி.டி.விக்கு சவால் விடும் வகையில் ஏற்பாடுகளில் அமைச்சர் காமராஜ் அட்டகாசம் செய்தார். 

அதே போன்று சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோரை வேன்களில் அழைத்து வந்து அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்தில் குவித்தனர். இதனால் துணை முதலமைச்சர் ஒ.பி.எஸ் வருவதற்கு முன்னதாகவே பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் நிரம்பி வழிந்தது. டி.டி.வியை விட அதிக கூட்டத்தை கூட்டி விட்டதாக அ.தி.மு.கவினர் பெருமிதம் தெரிவித்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக எழுந்து செல்ல ஆரம்பித்தனர். சிறப்பு விருந்தினரான ஓ.பி.எஸ் பேசும் போது பின்வரிசை சேர்கள் கிட்டத்தட்ட அனைத்துமே காலியானது. 

முன்வரிசையில் இருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் மட்டுமே நிகழ்ச்சி முடியும் வரை பொதுக்கூட்டத்தில் இருந்தனர். மற்றபடி அழைத்துவரப்பட்டவர்கள் எல்லோருமே ஒருவர் செல்ல அவர் பின்னாலேயே எழுந்து செல்ல ஆரம்பித்தனர். இதனால் துணை முதலமைச்சரை அழைத்து வந்த தங்களுக்கு போட்டியாக அமைச்சர் காமராஜ் நடத்திய கூட்டம் பிசுபிசுத்துவிட்டது என்கின்றனர் டி.டி.வி ஆதரவாளர்கள்.