ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை மன்மோகன் சிங், சோனியா காந்தி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர்.

ப.சிதம்பரத்துடனான சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், "இன்றைய தினம் எனது தந்தையை சந்திக்க மன்மோகன்சிங், சோனியா காந்தி வருகைதந்ததில் மகிழ்ச்சி. என் தந்தையும் என் குடும்பமும் இதற்காக நன்றிக்கடன் பட்டுள்ளோம். எங்களின் அரசியல் போராட்டத்திற்கு எங்கள் கட்சித் தலைவர்களின் இந்த வருகை உத்வேகம் அளிக்கிறது" என்று ெதரிவித்தார்.

இதற்கிடையில் ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் வாயிலாக தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தியும், டாக்டர் மன்மோகன் சிங்கும் என்னை இன்று சிறைக்கு வந்து சந்தித்தனர். அவர்களின் வருகையை கவுரவமாகக் கருதுகிறேன். கட்சி உறுதியாகவும் துணிச்சலாகவும் இருக்கும்வரை நானும் அவ்வாறே இருப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று சிதம்பரத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் “ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த வகையில் ஒட்டுமொத்தமாக எடுக்கப்பட்ட முடிவு. அது ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆனால், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வைத்து இருப்பது வேதனையளிக்கிறது நம்முடைய அரசு செயலாக்க முறையில், எந்த தனிமனிதரும் ஒற்றை முடிவுகளை எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும்  ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்துதான் எடுக்கமுடியும். அவ்வாறுதான் எடுக்கப்பட்டது அது ஆவணங்களாக இருக்கின்றன.

ஒரு டஜன் அதிகாரிகள், 6 மத்திய அ ரசின் செயலாளர்கள் ஆய்வு செய்து, அதை பரிந்துரை செய்து, அப்போது இருந்த அமைச்சர் சிதம்பரம் அதற்கு ஒப்புதல் அளித்தார். பல்வேறு அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில்தான் அந்த ஆவணத்தில் கையொப்பம் இட்டார் சிதம்பரம்

அதிகாரிகள் தவறு செய்யாவிட்டால், எவ்வாறு அந்த பரிந்துரைக்கு அமைச்சர் மட்டும் ஒப்புதல் அளித்திருக்க முடியும், அந்த தவறை செய்திருக்க முடியும். ஒரு குற்றத்துக்கு அந்த துறையின் அமைச்சர்தான் காரணம் என்று பழிசுமத்தினால் அரசின் ஒட்டுமொத்த முறையும் சீரழிந்துவிடும்.எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கில் நிச்சயம் சிதம்பரத்துக்கு நீதி கிடைக்கும்.

இவ்வாறு மன்மோகன் சிங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது