நேற்றுமுன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்றார். ஆனால் இந்த ஊர்வலத்துக்கு மேற்குவங்க அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது பயங்கர வன்முறை ஏற்பட்டது.

அப்போது ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது, இதனால் அங்கு கலவரம் மூண்டது.  இந்த கலவரத்துக்கு  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மதுராபூரில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மீண்டும் தேர்தல் ஆணையம் மற்றும் மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். 

கொல்கத்தாவில் அமித்ஷாவின் சாலை பேரணி நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.. 

ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டற்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் எனக் கூறும் பிரதமர் மோடி, அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரை நான் சிறையில்  தள்ளுவேன். எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.
பிரதமரையே சிறையில் தள்ளுவேன் என மம்தா பானர்ஜி சுறியுள்ளது  தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.