அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும். பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை  என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2019  நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர்  மோடியை எதிர்க்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து கட்சிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதையடுத்து . எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் மம்தா, சந்திர சேகர ராவ், சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இல்லாத யாரை வேண்டுமென்றாலும் பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தியும் பிரதமர் ஆகும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

 2019-ல் பாஜக  ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ், வலுவான  கூட்டணியை  உருவாக்க வேண்டும் என்பதில் முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறது. . எதிர்க்கட்சிகள் வரிசையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்புலம் இல்லாத ஒருவரை பிரதமர் வேட்பாளாராக ஏற்கவும் தயாராக உள்ளது. கூட்டணி அமைந்தால் எதிர்க்கட்சிகள் வரிசையில் பெண் ஒருவர் பிரதமர் ஆக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வழிவிடுவாரா என்ற நிலைப்பாட்டிற்கு, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேராத ஒருவரை பிரதமராக பார்க்க அவர் தயாராகவே உள்ளார்,”என்று தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து மம்தா பானர்ஜியா, மாயாவதியா என்ற கேள்வியும் இருக்கிறது.

இவ்வரிசையில் மம்தா பானர்ஜியை முன்னிறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  மம்தா பானர்ஜி தான்  ஒரு சாதாரண பணியாளர் மட்டுமே. என்னுடைய பணியை செய்ய விடுங்கள். இப்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக  அரசு நீக்கப்படவேண்டும். அதுவே முக்கிய குறிக்கோள் என கூறினார்.

தற்போதுள்ள பாஜக அரசு  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மற்றும் மக்கள் மீதான அட்டூழியங்களை மேற்கொண்டு வருகிறது. அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற  அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே விருப்பம், இணைந்து பணியாற்ற வேண்டுமே தவிர, பிரதமர் வேட்பாளர் யாரென்று யோசிக்க கூடாது. தேசத்தை பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் என்று  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.