மேற்கு வங்க முதல் மந்திரியான மம்தா பானர்ஜி மோடியை பற்றி தொடர்ந்து பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதன்படியே கடந்த 6 ஆம் தேதி பேரணி ஒன்றில் பேசிய அவர் மோடியைப் பற்றி காலாவதியான பிரதமர் என குறிப்பிட்டார். தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்னர் புதிய பிரதமருடன் நான் பேசுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் பங்குரா என்ற இடத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தெரிவிக்கும் போது, "நாட்டு பிரதமரை ஏற்க தயாராக இல்லை என மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் பிரதமரை அந்த நாட்டுப் பிரதமராக ஏற்பதில் பெருமை கொள்கிறார். மேற்குவங்காளத்தில் பாஜகவால் ஒரு பேரணியை கூட நடத்த முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார்.

நாட்டில் உள்ள 135 கோடி மக்களின் ஆதரவும் எனக்கு உள்ளது என்பதற்காக என்மேல் அவர் கோபப்பட்டால் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. இருந்தபோதிலும் மேற்குவங்காள மக்களுக்காக அவர் சிந்திக்கவேண்டும். சிட் பண்டு ஊழல் மற்றும் மாநிலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தலுக்கு மக்கள் அவர்கள் மீது வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கின்றனர். 

எனக்கு எதிராக மம்தா பானர்ஜி பயன்படுத்தும் வார்த்தைகளை உற்று நோக்கிப் பாருங்கள். தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார். தங்களுடைய பிரதமரை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் பிரதமரை ஏற்றுக் கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.என புட்டுப்புட்டு வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.