mamata will not attend karunanidhi birthday

எதையெல்லாமோ வைத்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அரசியல் செய்தவர் கருணாநிதி. ஆனால் இன்று அவரை வைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறது தி.மு.க. 

ஆம்! கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவை வரும் அவரது பிறந்த நாளான ஜூன் 3_ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்திட ஏற்பாடு செய்து வருகிறது தி.மு.க. இதில் கலந்து கொள்ள சொல்லி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் தவிர வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களையும் அழைத்திருக்கிறார்கள். 

தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான தலைவர்களை ஒரே மேடையில் திரட்டுவதன் மூலம் குடியரசு தலைவர் தேர்தலிலும் மத்திய அரசின் மூவ்களுக்கு ஒரு செக் வைக்கலாமென்பதும் ஸ்டாலினின் எண்ணம். கணிசமான எண்ணிக்கையில் தங்களுக்கு எம்.பி.க்கள் இல்லாத நிலையில் இந்த விழாவின் மூலம் தேசிய அரசியலில் தங்களுக்கான இருப்பை வலுவாக காட்ட நினைக்கிறது தி.மு.க. 

தி.மு.க. இந்த விழாவில் கலந்து கொள்ள தங்களை அழைக்கவில்லை என்று மாநில பா.ஜ.க. ‘ஏஞ்சாமி எங்கள ஒதுக்கி வெக்கிறீக?’ என்று புலம்பிப் பார்த்தது. ஆனால் எடுபடவில்லை. உடனே வெங்கய்யா நாயுடு மூலமாக ‘தமிழக அரசின் செயல்பாடுகள் மத்திய அரசை ஈர்த்துள்ளது.’ என்று ஒரு சர்டிஃபிகேட்டை கொடுக்க வைத்து தளபதியை டென்ஷனில் தெறிக்க வைத்திருக்கிறார்கள். 

இது போதாதென்று வைர விழாவில் கலந்து கொள்ள தி.மு.க. அழைத்தவர்களில் முக்கியவர்களான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஒடிசா முதல்வர் பட்நாயக்கும் தாங்கள் வரமுடியாத சூழலை சொல்லி ஜகா வாங்கியிருக்கிறார்கள். மம்தா சார்பில் அக்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர் பங்கேற்பார். ஆனாலும் அது ஒன்றும் தி.மு.க.வுக்கு பெரிய பெருமையில்லதான். 

தென்னிந்திய முதல்வர்களில் பக்கத்து வீட்டு அண்ணன் நாராயண சாமி ஜரூரா கலந்துக்குவார் நோ ப்ராப்ளம். ஆனால் மார்க்சிஸ்ட் முதல்வரான பினராயி வரவேண்டும் என்று தி.மு.க.வை விட மார்க்சிஸ்ட் அதிகம் எதிர்பார்க்கிறது. காரணம், மக்கள் நல கூட்டணி மண்பானை உடைஞ்சு போச்சு.

ஜெ., இல்லாத நிலையில் தடுமாறும் அ.தி.மு.க. குதிரையை நம்பி கூட்டு வைக்க முடியாது, பா.ஜ.க.வோ சித்தாந்த ரீதியில் எதிரி. ஆக அவர்களின் கையில் இருக்கும் ஒரே ஆப்ஷன் தி.மு.க. மட்டும்தான். ஆக அடுத்து வரும் தேர்தல்களுக்கு தி.மு.க கூட்டணியைதான் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் நாட வாய்ப்பிருக்கிறது. ஆக பினராயி வருவதன் மூலம் கூட்டணி பஸ்ஸில் ஈஸியாக துண்டு போட்டு வைக்கலாம் என்பது அவர்களின் கணக்கு. 

சோனியா நிச்சயம் வருவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவருக்கு சமீப காலமாக அடிக்கடி உடல் நல குறைபாடு ஏற்படுவதும் அவரது வருகையை கேள்விக்குறியாக்குகிறதாம். அதனால் ராகுலே வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ராகுலுக்கும் தி.மு.க.வுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். அதனால் அவரது வருகையின் மூலம் பெரிய பொலிடிக்கல் வைபரேஷனை ஏற்படுத்திவிட முடியுமா என்று யோசிக்கிறது தி.மு.க. 

எனவே சோனியாவை எப்படியாவது இந்த விழாவுக்கு விசிட் செய்து தமிழக அரசியலில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு எழுச்சியை உருவாக்கிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மூலம் டெல்லிக்கு தூது மேல் தூது விடுகிறது அறிவாலய தரப்பு. 

சோனியாம்மா நீங்களாச்சும் வருவீங்களாம்மா?