மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக தொண்டர்கள், அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ’சிறப்பு அழைப்பாளர்கள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பாஜக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்குக் கொடுக்கும் மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 
 
நேற்றிரவு டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில், பாஜக தலைவர் அமித்ஷாவுடன் சந்தித்து சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதப்பேச்சுவார்த்தையின் போதே ’சிறப்பு அழைப்பாளர்’ முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் பலர், கடந்த 6 ஆண்டுகளாக, பஞ்சாயத்து தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின் போது கொல்லப்பட்டதாக அக்கட்சி கூறுகிறது. 

2021 -ம் ஆண்டு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, சுமார் 7000 பேர் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வைக்கவுள்ளது மம்தாவுக்கு கொடுக்கும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. 

’திரிணாமூல் காங்கிரஸ் நிகழ்த்தும் வன்முறைக்கு’ எதிராக கட்சி உங்களோடு துணை நிற்கிறது என்பதை சொல்லும் விதமாகவே பாஜக இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்ததை அடுத்து, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித்ஷா, மேற்கு வங்கத்தில் உயிரிழந்த பாஜக-வினர் குறித்து பேசி இரங்கல் தெரிவித்தார்.

 

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸில் இருந்து 50 முக்கிய புள்ளிகள் பாஜகவுக்குத் தாவினர். இதில், 3 எம்.எல்.ஏ.,க்கள் சட்டமன்ற உறுப்பினர்களும், 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பாஜகவுக்கு தாவினர். மம்தாவுக்கும், மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என் கடமை. அதை நான் செய்வேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.