மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்தும் பேரணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 25 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

மக்களவை தேர்தலை முன்னிட்டும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாகவும் இந்தப் பொதுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வருகிறார். கொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர்களான குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சரத்பவார், அகிலேஷ் யாதவ், ஓமர் அப்துல்லா என 25 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உடல்நலக்குறைவால் சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேவேளை, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என்ற போதும் மம்தாவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணகானோர் பங்கேற்றுள்ளனர்.