மக்களவை தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுக்கு தாவி வருவதால் அணி மாறுபவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் மம்தா பானர்ஜி. 

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, “மம்தா அவர்களே… உங்களின் 40 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

சமீபத்தில் பாங்கோன் தொகுதியை சேர்ந்த திரிணாமூல் கட்சி எம்.எல்.ஏ மற்றும் 12 கவுன்சிலர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேற்கு வங்கத்தில் நிலவும் இந்த அரசியல் விவகாரம் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “ஒருவர் விலகினால், அவர் இடத்தில் 500 பேர் புதியதாக இணைவார்கள். எங்களது கட்சியை நாங்கள் மறுக்கட்டமைப்பு செய்யப் போகிறோம். ஊழல் செய்யும், பேராசை கொண்டவர்களுக்கு பதில் கட்சிக்காக உழைப்பவர்களை நாங்கள் நியமிக்கப் போகிறோம். 

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அதைச் செய்து முடிப்போம். பேராசையிலும் ஊழல் செய்வதற்கும் சிலர் வேறு கட்சிக்கு மாறுவது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. தாங்கள் செய்த காரியங்களால் நடவடிக்கைக்கு உள்ளாவர்கள் என்று பயந்து அவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார். 

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் வெறும் 2 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியது. ஆனால் 2019 தேர்தலில், 18 இடங்களைக் கைப்பற்றியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பலர் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறி வருகின்றனர்.