மேற்கு வங்கத்தில் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நான்கு கட்டத் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், 17-ஆம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே அது கடும் விமர்சனத்துக்குள்ளானது. மேலும் அஸ்ஸாம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவடையாததால் இந்த மாநிலங்கள், மேற்கு வங்கத்துக்காகக் காத்திருக்கின்றன.


இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் வேளையில், கடும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடியாததால், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சிய 4 கட்டத் தேர்தல்களுக்குப் பதிலாக ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்தி முடிக்கும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் மம்தா பதிவிட்டுள்ள நிலைத்தகவலில், “தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. தொற்று மேலும் அதிகாரித்தால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி எஞ்சிய நான்கு கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக சேர்த்து நடத்த வேண்டும். அதை ஒரே தேதியில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.