Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் நாற்காலியில் அமர முடியாத விரக்தியில் பேசும் கார்கே.. களத்தில் இறங்கி காங்கிரஸை கதறவிடும் வானதி..!

 ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை உறுதி செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனை, கட்டியணைத்து, மகிழ்ந்த தி.மு.க.வுடன், கூட்டணி வைத்துக் கொண்டு, ராஜிவ் உயிர்த்தியாகத்தை பற்றி பேச, காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

Mallikarjun Kharge speaks in frustration of not being able to sit on the cm chair.. vanathi srinivasan
Author
First Published Dec 23, 2022, 11:02 AM IST

உண்மைகளை மறைத்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு தொடர்பு இல்லை என திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வரும் காங்கிரஸ் கட்சிக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள, பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ராஜஸ்தான் மாநிலம் அல்வார் (Alwar) நகரில் டிசம்பர் 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், “காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி உயிரை தியாகம் செய்தார்கள்.  காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். பா.ஜ.க. எதையும் இழக்கவில்லை. பா.ஜ.க.வினர் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறக்கவில்லை. ஆனாலும், அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் ஏதாவது சொன்னால் தேச விரோதிகள் என அழைக்கப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.

Mallikarjun Kharge speaks in frustration of not being able to sit on the cm chair.. vanathi srinivasan

புதிதாக காங்கிரஸ் தலைவராகியுள்ள கார்கே அவர்கள், சோனியா, ராகுல், பிரியங்கா குடும்பத்தினருக்கு தனது விசுவாசத்தை காட்டுவதாக நினைத்து, 'தேசமே உயிர் மூச்சு' என வாழும், பா.ஜ.க.வினரை தேவையின்றி சீண்டியிருக்கிறார். கார்கே அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். அப்படியிருந்தும் பட்டியலினத்தை சேர்ந்த அவரை, கர்நாடக முதல்வராக்க, காங்கிரஸ் தலைமைக்கு அதாவது சோனியா, ராகுல் குடும்பத்திற்கு மனமில்லை. 2013-ல்,  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து வந்த, சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை கொடுத்த ராகுல், கார்கேவை கண்டுகொள்ளவில்லை.

இப்போதும், பெயரளவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தங்கள் குடும்பத்தைச் சாராத ஒருவரை நியமிக்க முடிவு செய்த சோனியா, ராகுலின் முதல் தேர்வு, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தான். அவர், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க விடாப்பிடியாக மறுத்துவிட்டதால், கடைசிநேரத்தில் 80 வயதான கார்கேவை தலைவராக்கினர். என்னதான், காங்கிரஸ் அகில இந்திய தலைவரானாலும், மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக இருந்திருந்தாலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், கர்நாடக முதல்வர் நாற்காலியில் ஒருநாள் கூட அமர முடியவில்லை என்ற வருத்தம், கார்கேவிடம் இருப்பதாக அவரது கட்சியினரே கூறுகின்றனர். அந்த விரக்தியில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல், பா.ஜ.க.வினர் மீது அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

Mallikarjun Kharge speaks in frustration of not being able to sit on the cm chair.. vanathi srinivasan

சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சி வேறு. இப்போதிருக்கும் காங்கிரஸ் என்பது வேறு.  சுதந்திரத்திற்கு முன்பு, காங்கிரஸில் இருந்தவர்களுக்கு வெவ்வேறு கொள்கைகள், கருத்துகள் இருந்தன. ஆனால், 'சுதந்திரம் பெற வேண்டும்' என்ற ஒரே நோக்கத்தில், வேறுபாடுகளை மறந்து காங்கிரஸில் இணைந்து போராடினர். ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டுவதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம் முடிந்து விட்டது. அதனால்தான், 1947-ல் சுதந்திரம் கிடைத்தவுடன் பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில், பின்னாளில் ஜனசங்கத்தை நிறுவிய சியாம பிரசாத் முகர்ஜியையும், மகாத்மா காந்தி இணைத்தார். காங்கிரஸை கலைக்க வேண்டும் என்றும் மகாத்மா காந்தி வலியுறுத்தினார். ஆனால், சுதந்திரம் கிடைத்த பிறகு நமக்குள் போட்டியிட்டு, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நடப்பதே தேர்தல். அதற்காக பல்வேறு கட்சிகள் தோன்றின. அதில் ஒன்றுதான் இப்போதிருக்கும் காங்கிரஸ்.  மகாத்மா காந்தி இருந்திருந்தால், காங்கிரஸ் பெயரில் கட்சியை நடத்த அனுமதித்திருக்க மாட்டார்.

எனவே, சுதந்திரப் போராட்டத்திற்கு இப்போதிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் உரிமை கொண்டாடுவதைப் போன்ற மோசடித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. பா.ஜ.க. தலைவர்கள் யாரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என, தொடர்ந்து ஒரு பொய்யை திரும்ப திரும்ப காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். 1980-ம் ஆண்டுதான் பா.ஜ.க. தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு 1951-ம் ஆண்டு, பாரதிய ஜனசங்கம் தொடங்கப்பட்டது. எனவே, பா.ஜ.க.வும், ஜனசங்கமும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில், 1947-ம் ஆண்டிலேயே நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. ஜன சங்கத்தை தொடங்கிய டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். விடுதலை பெற்றதும் 1947-ல், நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் வர்த்தம், தொழில் துறை அமைச்சராக இருந்தவர்.

Mallikarjun Kharge speaks in frustration of not being able to sit on the cm chair.. vanathi srinivasan

ஆர்.எஸ்.எஸ். என்ற இயக்கம் பிறந்ததே சுதந்திரப் போராட்டத்தில்தான். 1925-ல் ஆர்.எஸ்.எஸ்.ஸை தொடங்கிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், மாகாண காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்தவர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே, புரட்சி இயக்கங்களில் இணைந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததால், ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது டாக்டர் ஹெட்கேவாரின் மனதில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இத்தனை கோடி மக்கள் கொண்ட, இவ்வளவு பெரிய நாட்டை, ஒரு சிறு நாட்டிலிருந்து வியாபாரம் செய்ய வந்த, சிறு கூட்டம் எப்படி ஆட்சி செய்கிறது? அதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினார்.

ஜாதி, மொழி என பல வகைகளில் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். தாங்கள் யார்? இந்த நாடு எத்தகைய சிறப்பு மிக்கது என்பதை மக்கள் உணரவில்லை. இதை மக்களுக்கு உணர்த்தாமல், விடுதலை கிடைத்தாலும் பலனில்லை. பிரிட்டிஷாருக்கு பதில், நாளை வேறொரு நாட்டவர் நம்மை அடிமைப்படுத்தி ஆள நேரிடும். எனவே தேசிய நலனை முன்னிறுத்தி, மக்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் 1925 விஜயதசமி நாளில் அவர் தொடங்கிய இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்.ஸை தொடங்கிய பிறகும், காட்டு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமை பொறுப்பை தற்காலிகமாக வேறொருவரிடம் ஒப்படைத்தவர் ஹெட்கேவார். அவர் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்த பலரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்தான். இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு தொடர்பு இல்லை என திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது.

Mallikarjun Kharge speaks in frustration of not being able to sit on the cm chair.. vanathi srinivasan

இந்திரா, ராஜிவ் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆனால், பாஜகவினர் வீட்டு நாய் கூட உயிர்த் தியாகம் செய்யவில்லை என, மோசமான வார்த்தைகளை கார்கே பயன்படுத்தியுள்ளார். பாஜகவின் முன்னோடி இயக்கமான ஜனசங்கத்தை நிறுவிய, சியாம பிரசாத் முகர்ஜி, காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க போராடி, நேரு அரசால் சிறையில் அடைக்கப்பட்டு, சிறையிலேயே மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர், குற்றமிழைத்து சிறை செல்லவில்லை. நாட்டுக்காகவே உயிரை விட்டார். இது உயிர்த்தியாகம் இல்லையா? அதுபோல, ஜனசங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இன்றைய பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட, எங்களது கொள்கை ஆசான், தீனதயாள் உபாத்தியாய அவர்கள், உத்தரப்பிரதேசத்தின் மொகல்சராய் ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த இரு பெரும் தலைவர்களும் இளம் வயதிலேயே, தங்கள் உயிரை இழக்காமல் இருந்திருந்தால், காங்கிரசுக்கு எப்போதோ முடிவுரை எழுதப்பட்டிருக்கும். 

மத அடிப்படைவாதிகள், இடதுசாரி தீவிரவாதிகள், பயங்கரவாதிகளின் முதல் இலக்காக இன்றும் இருப்பது, ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான். தமிழகம்,  கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மேற்கு வங்கம், மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளையும், தொண்டர்களையும் இழந்துள்ளோம். இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த ராஜகோபாலன், பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், ஏ.பி.வி.பி. மாநில துணைத் தலைவர் பேராசிரியர் பரமசிவன் என எண்ணற்ற முக்கிய நிர்வாகிகளை பயங்கரவாதத்திற்கு இழந்துள்ளோம். 1998-ல் முன்னாள் துணைப் பிரதமர், எங்களின் பீஷ்ம பிதாமகன் அத்வானி அவர்களை கொல்லவே, கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 200-க்கும் அதிகமான நிர்வாகிகள், தொண்டர்களை, பயங்கரவாதத்திற்கு இழந்துள்ளோம்.

எனவே, தியாகம் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை. ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை உறுதி செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனை, கட்டியணைத்து, மகிழ்ந்த தி.மு.க.வுடன், கூட்டணி வைத்துக் கொண்டு, ராஜிவ் உயிர்த்தியாகத்தை பற்றி பேச, காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? 1980-ல் பா.ஜ.க. தொடக்க விழாவில் பேசிய அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், முதலில் தேசம், அடுத்து கட்சி. கடைசியில் தனி மனித நலன் ('Nation First, Party Next, Self Last')  முழங்கினார். இதுதான், ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டரின் உணர்வும் இதுதான். பா.ஜ.க.வுக்கு தேசம் தான் முதலில். 

Mallikarjun Kharge speaks in frustration of not being able to sit on the cm chair.. vanathi srinivasan

சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற இந்திய - சீன போர், இந்திய - பாகிஸ்தான் போர்,  கார்கில் போர் போன்று நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்ட தருணங்களில் ராணுவ வீரர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர் துணையாக நின்றனர். அதனால்தான், 1963 குடியரசு தின விழா அணிவகுப்பில் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ்ம் தொண்டர்களின் அணிவகுப்பிற்கு, அன்றைய பிரதமர் நேரு அழைப்பு விடுத்தார். கோவாவை இந்தியாவுடன் இணைக்கும் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பெரும் பங்காற்றியது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்களின் தியாகத்தால் தான் இன்றைய இந்தியா எழுந்து நிற்கிறது. 'இந்தியா என்பது ஒரு நாடல்ல', 'இந்தியாவுக்கு ஆங்கிலம் தான் தேவை', என்று திராவிடர் கழக பேச்சாளர் போல பிரிவினை வாதம் பேசிக் கொண்டிருக்கிறார் ராகுல். இந்திய கலாசாரம், பண்பாடு, இந்த மண்ணில் தோன்றிய மதங்களுக்கு எதிரான, சிந்தனை கொண்ட ராகுலின், கட்டுப்பாட்டில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து நல்ல வார்த்தைகள் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், மக்களுக்கு உண்மைகளை சொல்ல வேண்டும், காங்கிரஸின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios