Asianet News TamilAsianet News Tamil

”காவல்துறையை வைத்திருக்கும் முதல்வரே.! உடனே இதை செஞ்சு ஆகணும்” - மநீம ட்வீட் !

Kodungaiyur : திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் அப்பு (எ) ராஜசேகர்(30) இவரை கொடுங்கையூர் போலீசார் வழக்கு ஒன்றுக்காக இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Makkal Needhi Maiam tweet about Kodungaiyur lockup death issue
Author
First Published Jun 14, 2022, 1:39 PM IST

அன்று மாலை 5 மணி அளவில் திடீரென ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொடுங்கையூர் போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு ராஜசேகரின் உடல் நிலை மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனை நிர்வாகம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

Makkal Needhi Maiam tweet about Kodungaiyur lockup death issue

மரணமடைந்த ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் உள்ளது. ராஜசேகர் சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததை தொடர்ந்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடுங்கையூர் காவல் நிலைய குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட ராஜசேகரை அவரது வீட்டில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன் ராஜசேகர் மரணம் தொடர்பாக  5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விசாரணைக்கைதிகளை நடத்த வேண்டியவிதம் தொடர்பாக நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள், அறிவுறுத்தல்களை  வழங்கியிருந்தாலும், லாக்அப் மரணங்கள் தொடர்வது கொடுமையானது. குற்றவாளியே என்றாலும் தண்டிக்கவேண்டியது நீதித்துறைதான், காவல்துறையல்ல என்ற எளியோனுக்கும் தெரிந்த சட்டமுறையை காவல்துறை கடைபிடிக்காமல் முரண்டு பிடிப்பது கண்டனத்துக்கு உரியது.  

காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர், காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்திட வேண்டும். காவல்நிலையத்தில் நீதி மறுக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவேண்டும். காவல்நிலையங்களில் மக்களுக்கு நீதி கிடைத்திட, மக்கள் நீதி மய்யம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கோரியபடி“தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013ல்” உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாகவுள்ள பிரிவுகள் சீரமைக்கப்பட்டு காவல்துறை புகார் ஆணையமானது வலுவாக்கப்படவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

Follow Us:
Download App:
  • android
  • ios