உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வியக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவராக சந்தியா எனும் இருபத்து ஓரு இளம் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். கல்லூரியில் இளநிலை இரண்உடாமாண்டு படிக்கும் மாணவி. அதேவேளையில் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் வீரம்மாள் எனும் எழுபத்து ஒன்பது வயது பாட்டி தேர்வாகியுள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே எண்பத்து ரெண்டு வயது விசாலாட்சி எனும் பெண் மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து தலைவராகி இருக்கிறார். இன்னும் இன்னும் இப்படியான ஆச்சரிய தகவல்கள் களைகட்டுகின்றன. 
இந்த சூழலில், ’நேர்மையாக நடைபெறாது!’ எனும் காரணத்தைச் சொல்லி, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கமல்ஹாசனை அவரது கட்சியின் நிர்வாகிகள் இப்போது கழுவி ஊற்றிக் கொண்டு உள்ளதுதான் ஹைலைட்டே. 

இந்த உள்ளாட்சி  தேர்தலை கமல்ஹாசன் புறக்கணிக்கும் முடிவை எடுத்தபோதே அவரது கட்சிக்குள் கடும் சலசலப்புகள் வெடித்தன. ’இது தவறான முடிவு. நாம் தமிழர், அ.ம.மு.க. என எல்லா சிறிய கட்சிகளும் தேர்தலில் நிற்கிறார்கள். நம்மை விட ஆளுங்கட்சிக்கு மிக மோசமான எதிரி கூட தேர்தலை எதிர்கொள்கையில் நாம் புறக்கணிப்பது தவறு. வெற்றியோ, தோல்வியோ ஆனால் நாம் களத்தில் இருப்பது அவசியம்.” என்று எவ்வளவோ கமலிடம் சொல்லிப்பார்த்தனர். 
ஆனால் மனுஷன் மசியவில்லை. விடாப்பிடியாய் புறக்கணித்தார் தேர்தலை. இந்த நிலையில் இதோ இரண்டு நாட்களாக வெளி வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளோ கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளை கதற வைத்துள்ளன. “எண்பது வயசு பாட்டியில துவங்கி, இருபது வயசு பொண்ணு வரைக்கும் இந்த தேர்தல்ல  தைரியமா நின்னுருக்காங்க. சாதாரண பொது ஜனமான அவங்களுக்கு  எந்த பிரபலதன்மையோ, விளம்பரமோ கிடையாது. ஆனால் தங்களோட தன்னம்பிக்கையை முதலீடாக்கி தேர்தல்ல நின்னு, குறுகிய காலத்துல பல நூறு முதல் பல ஆயிரம் மனுஷங்களை சந்திச்சு பிரசாரம் பண்ணி இதோ வெற்றியும் பெற்றிருக்கிறாங்க. 


சொந்த ஊருக்குள் சண்டை சச்சரவு, ஆகாதவன், எதிரிகள், துரோகிகள், பிடிக்காதவன், பொறாமைப்படுறவள் அப்படின்னு எல்லாரையும் தாண்டி இந்த வெற்றியை சாதகமாக்கி இருக்கிறாங்க. ஆனால் எங்க கட்சி தலைவரோ உலக நாயகன். அவர் பெயரை சொன்னால் உலகம் முழுக்க தமிழர்களுக்கு தெரியும். அவரு பிரச்சாரத்துக்கே வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் வீடியோ மூலமாக பிரசாரம் செய்திருந்தாலும் போதும், எங்க கட்சிக்காரங்க உள்ளாட்சி தேர்தலில் நின்று, அவரது போட்டோவை காட்டி பிரசாரம் செய்து மிக மிக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். 


ஆனால் ‘கிராமம் கிராமமா பிரசாரத்துக்காக வெயில்ல சுத்தணுமே!’ன்னு சங்கடப்பட்டும், காலில் இப்பதான் ஆபரேஷன் முடிஞ்சிருக்குது அதனால் அலைய முடியாதுன்னு ‘நொண்டிச்சாக்கு’ சொல்லியும் தேர்தலை தவிர்த்துட்டார் எங்க தலைவர். களம் கண்டிருந்தால் கணிசமான பேர் வெற்றி பெற்றிருப்போம், அந்த நபர்கள் மூலமாக எதிர்வரும் சட்டசபை தேர்தலின் போது கிராம மக்களிடம் வலுவாக பிரசாரத்தை செய்து வின் பண்றதுக்கான வழியை சுலபமாக்கி இருப்போம். 
இப்ப எல்லாம் போச்சா!” என்று பொசுங்குகிறார்கள். 
பாவம்தான்!