என்னதான் ‘நிரந்தர எதிரி’ என்று பரஸ்பரம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களுக்குள் சாடிக் கொண்டாலும் கூட இதில் சின்ன மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது. கடந்த சில காலமாக அ.தி.மு.க.வை விட பா.ம.க.வைத்தான் தனது மிகப்பெரியப் எதிரியாக தி.மு.க. நினைக்கிறது. ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் ‘ஸ்டாலின்’ எனும் பெயரைக் கேட்டாலே உடல் பற்றிக் கொண்டு வருவது போலத்தான் கருத்து தெரிவிக்கிறார்கள். ஸ்டாலினும் இதற்கு சளைக்காதவர் போலத்தான் தன் பங்குக்கு போட்டுத் தாக்குகிறார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  அ.தி.மு.க.வோடு கூட்டணியை பா.ம.க. உறுதி செய்த நொடியில் ‘சூடு இருக்குதா? சொரணை இருக்குதா?’ என்று ராமதாஸ் தரப்பைப் பார்த்து ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் தமிழக அரசியல் வரலாற்றின் அவைக் குறிப்பிலிருந்து எந்த காலத்திலும் நீக்க முடியாத வார்த்தைகள். தேர்தல் தோல்வியை விட இந்த வார்த்தைகள்தான் ராமதாஸின் மனதில் நீங்காத வடுவாக மாறிவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தங்கள் கட்சி தொடர்பான ஒரு நிகழ்வில் பேசிய ராமதாஸ் “நம் மாவீரன் காடுவெட்டி குருவை கொலை செய்ய தி.மு.க.வின் பெரியவர்கள் சிலர் முயன்றனர். ஆனால் முடியவில்லை.” என்று பட்டாசு கொளுத்தினார்.  

இதற்கு அதிரிபுதிரியாக பதில் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க.வின் முன்னாள் மாநில நிர்வாகியும் தற்போது தி.மு.க.வில் இருப்பவருமான ஞானமூர்த்தி என்பவர்,  தங்கள் கட்சி மீதான இந்த விமர்சனத்துக்காக ராமதாஸை ரெளத்திரமாக விமர்சித்திருக்கிறார். மூன்று கொலைகளையும், சில கொலை வெறிதாக்குதல்களையும் குறிப்பிட்டு இதற்கெல்லாம் காரணம் யார்? என்று ராமதாஸை கேட்டிருக்கிறார். அத்தோடு விடாமல்.... “வன்முறைக் கட்சி பா.ம.க.வா அல்லது தி.மு.க.வா? என்று கேட்டால் அது சந்தேகமே இல்லாமல் பா.ம.க.தான் என்பது உலகத்துக்கே தெரியும். இரண்டு தலைமுறை இளைஞர்களை வழக்கு, வாய்தா என்று அலையவிட்டு அவர்களின் வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கிவிட்டீர்கள். சிறு வயதில் பேனாவை எடு, எழுது, படி என்ற சொல்வதை விட்டுட்டு வீச்சரிவாளையும், அதன் நுனியில் ரத்தம் சொட்டுவதைப் போலவும் படம் போட்டு டீ சர்ட் கொடுக்கிறீர்களே இதுவா ஜாதியை நல்வழிப்படுத்துவது?

இப்படி இளைஞர்களின் வாழ்வை இருண்ட சுடுகாடாக மாற்றுவதுதான் மாற்றம் முன்னேற்ற அன்புமணியா? ராமதாஸ் மகனை முன்னேற்றுவதுதான் வன்னிய ஜாதி மக்களின் வேலையா? எங்கள் தலைவர் கருணாநிதி சொன்னதால்தான் அன்புமணிக்கு மத்தியமைச்சர் பதவி கிடைத்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.  அந்த நன்றியெல்லாம் இல்லாமல் இப்போது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு புளுகும் ராமதாஸ் இந்த சமுதாயத்தின் மிகப்பெரிய சாபக்கேடு!” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். 
பா.ம.க.வின் பதிலடிக்காக வெயிட்டிங்!