maitreyan speak about cold war in admk
கட்சிக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒற்றுமையுடன் உழைத்து கட்சியை வெற்றி பெற செய்வோம் என மைத்ரேயன் எம்பி தெரிவித்துள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு, இரட்டை இலை சின்னம் பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு ஒதுக்கப்பட்டது. பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்பு, அமைப்புரீதியாகவும் சட்டப்பேரவையிலும் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருப்பதால் பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கே இரட்டை இலையை ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கட்சி கொடி, கட்சியின் பெயர் என அதிமுக தொடர்பான அனைத்தையுமே பழனிசாமி-பன்னீர்செல்வம் அணி பயன்படுத்தலாம். இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் அதிமுகவினர், இரட்டை இலை தங்களுக்கு கிடைத்தபிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம், கட்சியின் பெயரை பயன்படுத்தலாம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.
இரட்டை இலையை மீட்ட மகிழ்ச்சியில் இருந்தாலும்கூட பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே பனிப்போர் நடந்துவருவதை மறுக்க முடியாது. பனிப்போர் நடந்துவருவதை, சமீபத்திய மைத்ரேயனின் ஃபேஸ்புக் பதிவு உறுதிசெய்தது.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மைத்ரேயன், அதிமுகவில் இனிமேல் அணிகள் என்பதே கிடையாது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் செயல்படுவதுதான் உண்மையான அதிமுக என தெரிவித்தார்.
மேலும் அவருடைய முகநூல் பதிவு குறித்து விளக்கமளித்த மைத்ரேயன், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதை மறுக்கவில்லை. எனது முகநூல் பதிவில் தெரிவித்த கருத்தை திரும்பப்பெறவில்லை. அது உண்மைதான். சாதாரண கட்சியிலேயே கருத்து வேறுபாடுகள் இருப்பது வழக்கம். அப்படி இருக்கையில் ஒன்றரை கோடி தொண்டர்களை உடைய மாபெரும் கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் பிரிந்திருந்த அணிகள் இணைகையில், கண்டிப்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கும்.
கட்சிக்குள் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்து கட்சியை வெற்றியடைய செய்வோம். அதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக அதிமுக வெற்றிபெறும் என மைத்ரேயன் நம்பிக்கை தெரிவித்தார்.
