மகாராஷ்ட்ரா மாநில சட்டசபை தேர்தலில்பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் பதவியால் எழுந்த பிரச்சனையால் அந்த கூட்டணி ஆட்சி அமைச்ச முடியவில்லை. இதையடுத்து கடந்த 12-ந் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சி , தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து, அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டது.
இந்த கூட்டணி கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் 22-ந் தேதி இரவு அறிவித்தார்.

ஆனால் அதன்பின்னர் இரவோடு இரவாக அதிரடி திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்தன.சற்றும் எதிர்பாராத வகையில், 105 இடங்களை பெற்றுள்ள பாரதீய ஜனதா 54 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருடன் திடீர் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியது.

இதையடுத்து  ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.


இது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் அக்கட்சிகள் கூட்டாக ஒரு ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்தன.இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் கூறினார்.

அதன்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாக இருந்தபோதும், இந்த வழக்கில் சிறப்பு நிகழ்வாக மூத்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சய் கன்னா ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணை நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சிறந்த வழி, சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதுதான் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை” என கருத்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்போது சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக முடிவு செய்து தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.