மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி (161) வென்றது. இதனையடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், முதல்வர் பதவியை சமகாலம் விட்டு கொடுத்தால்தான் ஆதரவு கொடுப்போம் என சிவ சேனா பா.ஜ.க.வுக்கு செக் வைத்தது.

 ஆனால் சிவ சேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுப்பதில் பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை.இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் முடக்கமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சிவ சேனாவுக்கு ஆதரவு அளிக்க தயார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. 

அதேசமயம் சிவ சேனாவுக்கு கட்டாயம் ஆதரவு அளிக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி முதலில் கூறினார். இந்நிலையில் நேற்று சோனியா காந்தியை, சரத் பவார் சந்தித்து மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து பேசினார். இதனால் சோனியா காந்தியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத தலைவர் ஒருவர் இது குறித்து கூறுகையில், சிவ சேனா தலைமையிலான அரசில் தேசியவாத காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்புள்ளது. 

காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும். 1995ல் சிவ சேனாவுக்கு முதல்வர் பதவி, பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவி என்ற ஒப்பந்தத்தில் கூட்டணி உருவானது போல் சிவ சேனாவுக்கு முதல்வர் பதவி, தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி என்ற அடிப்படையில் தற்போது கூட்டணி உருவாகலாம். ஆனால் இதெல்லாம் பா.ஜ.க.வுடான கூட்டணியை சிவ சேனா முறித்து கொள்வதை பொறுத்தே அமையும் என தெரிவித்தார்.