இந்தியாவில் முதல் முறையாக மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் விரீயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனாவால் குணமடைந்துவர்கள் எண்ணிக்கை 4,749-ஆக உள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்ரா முதலிடத்திலும், 2வது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. மகாராஷ்டிராவில் 6,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதுவரை 283 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 840  பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திரா அவஹாத் (55 ) இவருக்கு நேற்று மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து மும்பாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

கடந்த 13-ம் தேதி மும்பாராவில் ஊரடங்கால் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து அமைச்சருக்கு சமூக பரவல் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளருடன் நேரடியாக தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை தானே மாநகராட்சி நிர்வாகம் தனிபடுத்தி உள்ளது.