சென்னை பெசன்ட் நகரில் கோலம் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் மூலம் போராட்டம் நடத்தியது அலங்கோலமாக இருந்தது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார். 
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சில மாணவிகளும் மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த கோலம் போடப்பட்ட பகுதிக்கு வந்த அடையாறு சாஸ்திரி நகர்  காவல் துறையினர் கோலத்தை வரைய அனுமதி மறுத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை போலீஸார் கைது செய்து சமூக கூடத்தில் வைத்தனர்.


மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 
இதற்கு பதில் அளித்த பாண்டியராஜன், “கோலம் போட்டதற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. கோலத்தின் மூலம் கூறப்பட்ட கருத்து அலங்கோலமாக இருந்தததால் கைது செய்யப்பட்டிருக்கலாம். கோலத்தின் மூலம் கூறிய கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தால் கைது செய்ய வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. அது கோலமாக இருந்தாலும் சரி, மீம்ஸ்களாக இருந்தாலும் சரி” என்று  தெரிவித்துள்ளார்.