வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. போட்டி கடுமையாக உள்ள நிலையில், இதற்கிடையே ஜெயிப்பதற்கு முன்னாடியே ஜெயித்துவிட்டதை போல செம கெத்தாக பேட்டி கொடுத்துள்ளார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். 

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏசி சண்முகமும் திமுக கூட்டணி வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் களம் கண்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சும் போட்டியிட்டார். மொத்தமாக 28 பேர் போட்டியிட்டனர். 

கடந்த ஐந்தாம் தேதி நடந்த வாக்குப்பதிவில், வேலூர் தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. 

காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்தார். அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து ஏசி சண்முகம் முன்னிலை வகித்துவருகிறார். 

ஏசி சண்முகம் முன்னிலை வகித்தாலும் பெரியளவிலான வாக்கு வித்தியாசம் இல்லை. ஏசி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்துக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வரை சென்றது, மீண்டும் குறைய தொடங்கியது. காலை 11.30 மணி நிலவரப்படி ஏசி சண்முகம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 351 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 37 ஆயிரத்து 189 வாக்குகளை பெற்றுள்ளார். வித்தியாசம் வெறும் 3162 வாக்குகள் தான். 

அதனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதற்குள்ளாக அதிமுகவினர் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையக பகுதியில் பொதுமக்களுக்கு அதிமுகவினர் ஸ்வீட் கொடுத்து கொண்டாடிவருகின்றனர். 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், திமுகவின் போலி பிரச்சாரம் மற்றும் வாக்குறுதிகளை மக்கள் கண்டுகொண்டுவிட்டனர். பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவராக சித்தரிக்கப்பட்டார். அதுகுறித்த மக்களின் கருத்தும் மாறிவிட்டது. இனிவரும் இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுகவின் வெற்றி தொடரும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.