தேனியில் அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ்ன்  மகன் ரவீந்திரநாத்துக்காகப் பணம் அள்ளி இறைக்கப்பட்டது. அமமுக சார்பில்  தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுகவுக்கு இணையாக செலவு செய்தார். 

ஆனால் காங்கிரஸ்  வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செலவு செய்யவில்லை என்றே கூறவேண்டும். அவருக்காக ஒரு சில பகுதிகளில் திமுகவே செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேனி தொகுதியில் அதிகம் வசிக்கும் நாயுடு இன மக்களை இளங்கோவன் சத்தமில்லாமல் சந்தித்து வாக்குகளை அள்ளியிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. .

மதுரையைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை ஆகிய இருவருமே கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்துள்ளனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், தேர்தல் செலவுக்கே பணம் இல்லாமல் இருந்ததாவும், கட்சி உறுப்பினர்கள் தரும் சிறு சிறு நன்கொடைகளை வைத்தே பிரச்சாரத்தை ஓட்டியுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர் யோசித்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், திமுகவினர்  ஒரு சில பகுதிகளில் மட்டும் ஓட்டுக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின் மனைவி கமலா, சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் மதுரையில் கணிசமாக வாழக்கூடிய அந்தச் சமுதாய முக்கியப் பிரமுகர்களிடம் பேசி சௌராஷ்டிர சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு உத்தரவாதம் செய்துள்ளார்.

நெல்லை தொகுதியிலும் அதே நிலைதான். அதிமுக, திமுக, அமமுக மூன்று கட்சியிலும் உள்ள வேட்பாளர்கள் முறையே மனோஜ் பாண்டியன், ஞான திரவியம், மைக்கேல் ராயப்பன் என  அனைவருமே பணத்தை அள்ளி வீசியிருக்கிறார்கள். குறிப்பாக திமுக வேட்பாளர் ஞான திரவியம் சற்று கூடுதலாக செலவு செய்துள்ளார் என தெரிகிறது. அதிமுக ஓட்டுகளை அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் கணிசமாக பிரிப்பதால் திமுகவுக்கே அந்த தொகுதி சாதகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு விவரங்களையும் குறிப்பிட்டுள்ள அந்த உளவுத் துறையின் ரிப்போர்ட்டில் தேனி, மதுரை ஆகிய தொகுதிகளின் எக்சிட் போல் விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் தேனி, மதுரை தொகுதிகளில் அதிமுக பின் வாங்கியிருக்கிறது, திமுக முன்னிலை பெறுகிறது என்பதுதான்  எடப்பாடி பழனிசாமிக்கு போயிருக்கும் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் நிலையிலேயே இதுதான் நிலவரம் என்றால் மற்ற தொகுதிகளில் எப்படி இருக்குமோ என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போயிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.