மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டக்கோரி முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் கடைகள் அடைக்கப்பட்டன.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என முக்குலத்தோர் அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.  ஆனால் அந்தக் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுதல், ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்தில் முத்துராமலிங்கனார் என்ற பெயரை மாற்றி அவரது முழு பெயரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அச்சிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தேவர் அமைப்பினர் மதுரை நகரில் ஒரு நாள் அடையாள பந்த் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர்.

இன்று மதுரை விமானநிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பெரும் அளவிலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தேவர் அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் நடத்திய போராட்டத்தால் மதுரை மாநகரே ஸ்தம்பித்தது. பேருந்து போக்குவரத்துகள் முடங்கின. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. போராட்டம் வெடித்ததால் மதுரை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மதுரை மாநகரில் இப்போது வரை பதற்றம் நிலவி வருகிறது.  ஒருபுறம் தர்ணா நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நிலையில் மதுரை நகரில் நுழையும் தேவரின அமைப்பினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.