Asianet News Tamil

தற்சார்பு பாரதம் எனும் திடீர் புளியோதரை... நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் மீது மதுரை எம்.பி. அட்டாக்!

“ஐந்து நாட்கள் அறிவிப்புகளில் யாருக்கு பொழிந்திருக்கிறது? எவ்வளவு பொசிந்திருக்கிறது? பொசிந்ததாவது போய்ச் சேருமா? என்பவைதானே அளவுகோல்கள். அறிவிப்புகளின் தன்மையே அடிப்படையான சந்தேகங்களுக்கு காரணம். இன்று (நேற்று) என்ன அறிவிப்புகள்? கேந்திர தொழில்களிலும் (Strategic sector) தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவற்றில் எல்லாம் தொழிலுக்கு அதிக பட்சம் 4 அரசு நிறுவனங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒரே பிளாங்க் செக் போல கார்ப்பரேட்களுக்கான பொழிவு."
 

Madurai MP S.Venkatesan attacked 20 Lakh cr schemes
Author
Madurai, First Published May 18, 2020, 9:27 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இந்திய விடுதலை பாரம்பரியத்தில் முகிழ்த்த தற்சார்பு கோட்பாடுக்கும் இவர்கள் திடீர் புளியோதரை போன்று சொல்கிற  ‘தற்சார்பு பாரத’த்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்று மதுரை  நாடாளுமன்ற தொகுதி (சிபிஎம்) உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

 
கொரோனா ஊரடங்கு அமலானது முதலே ஏழை, எளிய மக்களுக்கு  நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. ஏழை, எளிய மக்கள் கஷ்டத்திலிருந்து மீள அவர்களுடைய கையில் பணம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் யோசனை கூறின. கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில் பொருளாதார மீட்புத்திட்டமாக 20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். கடந்த 5 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 20 லட்சம் கோடி தொகுப்பிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.


இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் அறிவிப்புகளை விமர்சித்து மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், “ஐந்து நாட்கள் அறிவிப்புகளில் யாருக்கு பொழிந்திருக்கிறது? எவ்வளவு பொசிந்திருக்கிறது? பொசிந்ததாவது போய்ச் சேருமா? என்பவைதானே அளவுகோல்கள். அறிவிப்புகளின் தன்மையே அடிப்படையான சந்தேகங்களுக்கு காரணம். இன்று (நேற்று) என்ன அறிவிப்புகள்? கேந்திர தொழில்களிலும் (Strategic sector) தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவற்றில் எல்லாம் தொழிலுக்கு அதிக பட்சம் 4 அரசு நிறுவனங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒரே பிளாங்க் செக் போல கார்ப்பரேட்களுக்கான பொழிவு.
இந்திய விடுதலை பாரம்பரியத்தில் முகிழ்த்த தற்சார்பு கோட்பாடுக்கும் இவர்கள் திடீர் புளியோதரை போன்று சொல்கிற "தற்சார்பு பாரதத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இவையெல்லாம் அமைதியான, நிதானமான சூழலில் விரிவான கருத்தொற்றுமையோடு எடுக்கப்பட வேண்டிய மிகப் பெரிய பொருளாதார முடிவுகள். நெருக்கடிமிக்க சூழலில் அவசர அவசரமாக திணிக்கப்படுவது ஏன்? ஆன்லைன் கல்வி என்ற பெயரில் டாட்டா, மிட்டல் போன்றவர்களின் நிறுவனங்களுக்கு புதிய சந்தை என்கிற இலவச இணைப்பு வேறு.


இரண்டாவது, மாநில அரசுகளின் கடன் அளவு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக (GSDP யில்) உயரும் என்ற அறிவிப்பு. ஆனால், அந்த அறிவிப்பு ஓர் சுருக்கு கயிறோடு வந்திருக்கிறது. அதாவது கூடுதல் கடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அதைப் பெற மத்திய அரசு காண்பிக்கிற பொருளாதார திசை வழியில் மாநில அரசுகள் பயணித்தாக வேண்டும். நிதியமைச்சரே, உங்களின் பொருளாதார அணுகுமுறையிலிருந்து மக்கள் கருத்து மாறுபடுவதால்தானே வேறு அரசியல் கட்சிகள் மாநில ஆட்சிகளில் அமர்கின்றன. மாநில அரசின் செயல்பாடுகளை நீங்கள் தீர்மானிப்பது கூட்டாட்சி மீதான தாக்குதல் அல்லவா! மாநில அரசுகளை தேர்ந்தெடுத்துள்ள மக்கள் கருத்தைப் புறம் தள்ளுவது அல்லவா!
 100 நாள் கிராமப் புற வேலைத் திட்டத்திற்கு ரூ. 40000 கோடி ஒதுக்கீடு உயர்வு என அறிவிப்பு. சுகாதார கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு. பொசிவது போல தோன்றினாலும் அவை போய்ச் சேருமா என்பதே கேள்வி. கரோனா மார்ச் 23-க்கு பிறகுதான் ஊரடங்கு என்ற நிலைக்கு சென்றது. ஆனால், 2019- 20 முழுக்க 100 நாள் வேலைத் திட்டத்தில் கிடைத்த சராசரி நாட்கள் 41 தான். இவர்கள் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிய 61000 கோடியில் இவ்வளவுதான் கிடைத்தது. அதிலும்கூட ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு கூலி பங்கில் மாநில அரசுக்கு வைக்கிற பாக்கி தனிக்கதை.


நிதியமைச்சரே, இப்போது நீங்கள் சொல்கிற 40000 கோடி இந்தியா முழுக்க 100 நாள் வேலை தர போதுமானதா? சராசரி வேலை நாட்கள் கூடுமா? இப்பவும் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை என்ற விதியை நீங்கள் தளர்த்தவில்லையே! கிராமங்களுக்கு திரும்பிப் போய் குடும்பத்தோடு சேர்ந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்க்கு எப்படி வேலை கேட்கும்? சுகாதார ஒதுக்கீடு ஜி.டி.பி யில் 3 சதவீதம் வரை இருக்க வேண்டுமென்பது இன்று நேற்றா கோரப்படுகிறது? கடந்த பட்ஜெட்டில்கூட நீங்கள் செய்தது 1.1 சதவீதம் மட்டுமே. இப்போதும் கூட பொதுவான அறிவிப்பாக உள்ளது. ஒதுக்கீடுகளில் எவ்வளவு உயர்வு என்பது சொல்லப்படவில்லை.
வரவேற்போம் பெரும்பான்மை மக்களுக்கு பொழிந்தால்.. ஆனால் பொழிந்திருப்பதோ கார்ப்பரேட்டுகளுக்கு.. ஆறுதல் அடைவோம் கொஞ்சமாவது பொசிந்தால்..ஆனால் காகிதத்தில் மட்டுமே இருந்து கைவசமாகாவிட்டால் என்ன பயன்.. போய்ச் சேராது என்பது எங்கள் சந்தேகம் மட்டுமல்ல... கடந்த கால அனுபவம்... எப்படி வரவேற்பது சொல்லுங்கள்....” என்று சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios