ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமே உறுதிமொழி எடுத்ததாகவும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என்றும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களை 'ஹிப்போகிரேடிக்' உறுதிமொழியை ஏற்க வைப்பதற்கு பதிலாக சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டந் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிகழ்ச்சி மேடையிலே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நிலையில் கல்லூரியின் முதல்வர் ரத்தின வேல் பணி நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. அது மட்டுமல்லாது இப்போகிரேடிக் உறுதிமொழியையே பின்பற்றுமாறும் மருத்துக் கல்லூரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியது.
சமஸ்கிருத உறுதிமொழி பற்றி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் மருத்துவக்கல்வி விளக்கம் கோரியது. மேலும் தவறுதலாக சமஸ்கிருத மொழியிலிருந்து உறுதிமொழியை பதிவிறக்கம் செய்ததாக முதல்வர் ரத்தினவேல் விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது. HIPPOCRATIC உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டதாகவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமே உறுதிமொழி எடுத்ததாகவும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என்றும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எந்த வித உள்நோக்கமும் இல்லை எனவும் இது முழுக்க மாணவர்கள் தயாரித்த நிகழ்வு எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசர கதியில் வேலை செய்யப்பட்டதால் மதுரை டீன் ரத்தினவேல் கவனத்திற்கு கொண்டுசெல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
